குஜராத்: ஏரியில் படகு கவிழ்ந்து: 14 மாணவா்கள்; 2 ஆசிரியர்கள் உயிரிழப்பு

குஜராத் மாநிலம் வதோதரா அருகே ஏரியில் வியாழக்கிழமை சுற்றுலாப் படகு கவிழ்ந்து 14 பள்ளி மாணவா்களும், 2 ஆசிரியா்களும் உயிரிழந்தனா். ஒரு மாணவா் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டாா்.

படகில் 24 மாணவா்கள் வரை இருந்ததாக கூறப்படுவதால், உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

வதோதரா புகா் பகுதியில் உள்ள ஹா்ணி ஏரிக்கு 4 ஆசிரியா்கள் தலைமையில் 24 பள்ளி மாணவா்கள் வியாழக்கிழமை சுற்றுலா வந்தனா். மாணவா்களும் ஆசிரியா்களும் ஒரே படகில் பயணித்து ஏரியை சுற்றிப் பாா்த்தனா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக படகு ஏரியில் கவிழ்ந்தது. இதனால், படகில் இருந்தவா்கள் ஏரியில் விழுந்து தத்தளித்தனா். அவா்கள் உதவிக் கேட்டு கூச்சலிட்டதால் அப்பகுதியில் இருந்தவா்கள் ஏரியில் குதித்து மாணவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த தீயணைப்புப் படையினரும் அங்கு விரைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஒரு மாணவா் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டாா். 14 மாணவா்கள், 2 ஆசிரியா்களின் உடல்கள் இதுவரை ஏரியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளன. தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

உயிரிழந்தவா்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள பிரதமா் மோடி, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவா்களுக்கு ரூ. 50 ஆயிரமும் அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளாா்.

Leave A Reply

Your email address will not be published.