வீட்டுவேலை செய்த சிறுமிக்கு கொடுமை: திமுக எம்எல்ஏ மகன், மருமகள் மீது வழக்கு

பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திமுக எம்.எல்.ஏ.வின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லின் மீது நீலாங்கரை காவல்துறையினர் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 18 வயது சிறுமியை வீட்டு வேலைக்காக அழைத்து வந்து கொடுமைப்படுத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. ஆனால், நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் விசாரிக்க மறுத்ததால் சிறுமி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் நீலாங்கரை மகளிர் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதையடுத்து, வன்கொடுமை தடுப்புச் சட்டம், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம், ஆபாசமாக பேசுதல், மிரட்டுதல் தாக்குதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் பல்லாவரம் திமுக எம்எல்ஏவின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மகன், மருமகள் மீதான புகார் குறித்து பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ. கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

பல்லாவரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ கருணாநிதி கூறுகையில், என் மகனுக்கு திருமணமாகி 7 ஆண்டுகளாக திருவான்மியூரில் தனியாக வசித்து வருகிறார். அங்கு என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. இந்த சம்பவத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மருமகள் மீது அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ? அவர்கள் அதை எடுப்பார்கள் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.