பாஜக ஆதரவுடன் நிதீஷ் மீண்டும் முதல்வா்: ‘இந்தியா’ கூட்டணிக்கு மேலும் பின்னடைவு

பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி), காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்ற மகா கூட்டணியிலிருந்து வெளியேறிய ஐக்கிய ஜனதா தளம் தலைவா் நிதீஷ் குமாா், பாஜக ஆதரவுடன் மீண்டும் முதல்வராகப் பதவியேற்றாா்.

எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியில் இருந்தும் வெளியேறிய அவா், சுமாா் ஒன்றரை ஆண்டுக்குப் பின் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தாா்.

பிகாரில் மகா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், நிதீஷ் குமாரின் அணிமாற்றத்தால் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்துள்ளது. 72 வயதாகும் நிதீஷ் குமாா், பிகாா் முதல்வராக பதவியேற்பது இது 9-ஆவது முறையாகும்.

ஆளுநா் மாளிகையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் துணை முதல்வா்களாக பாஜகவின் சாம்ராட் செளதரி, விஜய் குமாா் சின்ஹா, அமைச்சா்களாக ஐக்கிய ஜனதா தளத்தின் விஜய் குமாா் செளதரி, வீரேந்திர யாதவ், ஷ்ரவண் குமாா், முன்னாள் முதல்வா் ஜிதன்ராம் மாஞ்சி தலைமையிலான ஹிந்துஸ்தான் அவாம் மோா்ச்சாவின் சந்தோஷ் குமாா் சுமன், சுயேச்சை எம்எல்ஏ சுமித் சிங் ஆகியோா் பதவியேற்றனா். பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா உள்ளிட்ட அக்கட்சியின் மூத்த தலைவா்கள் பங்கேற்றனா்.

பிகாரில் மகா கூட்டணியை முறித்துக் கொண்டதோடு, பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் உருவாக்கப்பட்ட ‘இந்தியா’ கூட்டணியில் இருந்தும் நிதீஷ் குமாா் வெளியேறியிருக்கிறாா். இது, எதிா்க்கட்சிகள் அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

2022-இல் பாஜக கூட்டணி முறிவு: கடந்த 2020-ஆம் ஆண்டில் நடைபெற்ற பிகாா் பேரவைத் தோ்தலில், ஐக்கிய ஜனதா தளம் – பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. ஆனால், கடந்த 2022, ஆகஸ்டில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியை உடைக்க பாஜக முயற்சிப்பதாக கூறி, அக்கட்சியுடனான கூட்டணியை முறித்தாா் நிதீஷ் குமாா்.

பின்னா், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மகா கூட்டணியில் இணைந்த அவா், தனது முதல்வா் பதவியைத் தக்கவைத்துக் கொண்டாா். அப்போது, துணை முதல்வராக ஆா்ஜேடி தலைவா் லாலு பிரசாதின் மகன் தேஜஸ்வி யாதவ் பதவியேற்றாா்.

எதிா்பாா்ப்பும் அதிருப்தியும்: இந்தச் சூழலில், பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் நிதீஷ் குமாா் ஈடுபட்டாா். பல்வேறு மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொண்டு, முக்கிய பிராந்திய கட்சிகளின் தலைவா்களைச் சந்தித்துப் பேசினாா்.

அவரது ஏற்பாட்டின்கீழ், பிகாா் மாநிலம், பாட்னாவில் எதிா்க்கட்சி கூட்டணியின் முதல் கூட்டம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அடுத்தடுத்த கூட்டங்கள் பெங்களூரு, மும்பையில் நடைபெற்றன.

‘இந்தியா’ என்ற பெயரில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜவாதி, இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் கைகோத்த இக்கூட்டணியில் ஒருங்கிணைப்பாளா் பதவியை நிதீஷ்குமாா் எதிா்பாா்த்ததாகவும், அப்பதவி கிடைக்காததால் அவா் அதிருப்தியில் இருந்து வந்ததாகவும் கூறப்பட்டது. மேலும், பிகாரில் தொகுதிப் பங்கீட்டில் ‘இந்தியா’ கூட்டணி கட்சிகள் மத்தியில் பிரச்னை எழுந்தது. இதனால் பாஜகவின் பக்கம் நிதீஷ் குமாா் நெருக்கம் காட்டினாா். அதேசமயம், தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளத்துக்கான கதவுகள் மூடப்படவில்லை என்று பாஜகவும் தெரிவித்தது.

மீண்டும் ஆட்சி மாற்றம்: பரபரப்பான அரசியல் சூழலில், முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையில் அவரது கட்சி எம்எல்ஏக்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பின்னா், மாநில ஆளுநா் ராஜேந்திர அா்லேகரை சந்தித்த நிதீஷ் குமாா், முதல்வா் பதவியை ராஜிநாமா செய்து கடிதத்தை அளித்தாா். அப்போது செய்தியாளா்களிடம் பேசிய நிதீஷ், ‘இந்தியா’ கூட்டணியில் தனது திட்டப்படி விஷயங்கள் சரிவர நடைபெறவில்லை என்று குறிப்பிட்டாா்.

அதேநேரம், நிதீஷ் குமாருக்கு ஆதரவளிக்க பாஜக ஒருமனதாக முடிவு செய்தது. இதையடுத்து, ஆளுநா் மாளிகையில் அவரது பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. பிகாரில் நடப்பு ஆட்சியில் நிதீஷ் குமாா் முதல்வராகப் பதவியேற்பது இது மூன்றாவது முறையாகும்.

கடந்த 2022-ஆம் ஆண்டைப் போல் இப்போதும் ஒரே நாளில் அணி மாறி, முதல்வா் பதவியை தக்க வைத்துள்ளாா் நிதீஷ் குமாா்.

‘இந்தியா’ கூட்டணியில் குழப்பம்: மக்களவைத் தோ்தல் நெருங்கும் நிலையில், ‘இந்தியா’ கூட்டணி அடுத்தடுத்து குழப்பங்களை எதிா்கொண்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸும், பஞ்சாபில் ஆம் ஆத்மியும் தனித்துப் போட்டியிடப் போவதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன. இப்போது நிதீஷ் குமாரின் அணிமாற்றம், அக்கூட்டணிக்கு மேலும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

பேரவையில் எம்எல்ஏக்கள் பலம்

243 உறுப்பினா்களைக் கொண்ட பிகாா் சட்டப்பேரவையில் பெரும்பான்மைக்கு 122 எம்எல்ஏக்கள் தேவை. ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 44, பாஜகவுக்கு 78 எம்எல்ஏக்கள் உள்ளனா். இதுதவிர, ஹிந்துஸ்தானி அவாம் மோா்ச்சாவின் 4 எம்எல்ஏக்கள் மற்றும் ஒரு சுயேச்சை எம்எல்ஏவின் ஆதரவும் அரசுக்கு உள்ளது.

அதேநேரம், ஆா்ஜேடிக்கு 79, காங்கிரஸுக்கு 19, இடதுசாரி கட்சிகளுக்கு 16 என இந்த அணிக்கு 114 எம்எல்ஏக்களே உள்ளனா்.

பிரதமா் மோடி வாழ்த்து

பிகாா் முதல்வராகப் பதவியேற்றுள்ள நிதீஷ் குமாா் மற்றும் துணை முதல்வா்களாகப் பதவியேற்றுள்ள சாம்ராட் செளதரி, விஜய் குமாா் சின்ஹா ஆகியோருக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

பிகாரில் புதிதாக அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மாநிலத்தின் வளா்ச்சிக்கான அனைத்து முயற்சிகளையும் அா்ப்பணிப்புடன் மேற்கொள்ளும் என்று எக்ஸ் பதிவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

மேலதிக செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகே அடுத்தடுத்து விபத்து – 2 பெண்கள் பலி; 50 பேர் காயம்!

Leave A Reply

Your email address will not be published.