கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி 1994 – 1996 ஆம் ஆண்டுக்குரியது! – மீட்கப்பட்ட 40 மனித எச்சங்கள் தொடர்பில் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ அறிக்கை.

முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாய் பகுதியில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 40 மனித எச்சங்களும் 1994 ஆம் ஆண்டுக்கும் 1996 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டவை என்று தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ நீதிமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் தொடர்பான வழக்கு முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்று விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த அறிக்கையின் விவரம் வெளியாகியுள்ளது.

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகளினுடையவை எனச் சந்தேகிக்கும் 40 மனித உடற்பாகங்கள், உடைகள் மற்றும் இலக்கத் தகடுகள் மீட்கப்பட்டன.

இவ்வாறு மீட்கப்பட்ட உடல்கள் தொடர்பிலும், மேலும் எந்தளவு பிரதேசத்தில் எத்தனை உடல்கள் இருக்கலாம் என்பது பற்றியும், மீட்கப்பட்ட உடல் பாகங்கள் எத்தனையாம் ஆண்டுக்குரியவை என்பது குறித்தும் தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆய்வில் ஈடுபட்டிருந்தார்.

இவ்வாறு மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அது இன்று மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

அந்த அறிக்கையில், மீட்கப்பட்ட மனித உடல் பாகங்கள் அனைத்தும் 1994 ஆம் ஆண்டுக்கும் 1996 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் புதைக்கப்பட்டுள்ளன என்றும், இவை எந்தவொரு மதச் சடங்கு முறைகளையும் பின்பற்றி அடக்கம் செய்யப்படவில்லை என்றும், இந்த உடல்கள் காணப்படும் இடத்தில் மேலும் 2 மீற்றர் தூரத்துக்கு நிலத்துக்கு கீழே இரு அடுக்குகளில் உடல்கள் காணப்படுகின்றன என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை மீட்கப்பட்ட உடல்களில் ஆண்கள், பெண்களின் உடல் பாகங்கள் காணப்படுகின்றன என்று தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ அறிக்கையிட்டுள்ளார் என்று முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி வாசுதேவா தெரிவித்தார்.

இதேநேரம் இந்தப் புதைகுழி அகழ்வுக்காக 60 இலட்சம் ரூபாவும், உடல்கள் ஆய்வுக்கு 60 இலட்சம் ரூபாவும் தேவை எனக் கோரப்பட்டபோதும் அந்த நிதிக்கான அனுமதி இதுவரை கிடைக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.