தேர்தலை ஒத்திவைக்கின்ற எண்ணம் என்னிடம் இல்லை – சம்பிக்கவிடம் ரணில் தெரிவிப்பு.

“ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் என்னிடம் இல்லை. இவ்வருடம் குறித்த நேரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அடுத்த வருட ஆரம்பத்தில் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த எதிர்பார்த்துள்ளோம்.”

இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணியின் “நாட்டுக்கான ஒன்றுபட்ட நடவடிக்கை” என்ற தலைப்பிலான முன்மொழிவு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று கொழும்பில் உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தேர்தலை நடத்துவது தொடர்பில் பாட்டலி சம்பிக்க ரணவக்க எம்.பி. எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.

“நாட்டின் வீழ்ச்சி அடைந்த பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த அரசு கடந்த இரண்டு வருடங்களில் கடுமையாக உழைத்துள்ளது” – என்றும் இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மறுசீரமைப்புத் தீர்மானங்கள் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மிகச்சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு அரசு செயற்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அனைவரினதும் ஆதரவுடன் அதனை மேலும் நடைமுறைப்படுத்துவதே தமது நோக்கமாகும் என்றும் தெரிவித்தார்.

அரசியல் பேதமின்றி நாட்டுக்கான பொதுவான வேலைத்திட்டத்தில் இணையுமாறு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் விடுத்துள்ள திறந்த அழைப்பையும் நினைவுகூர்ந்த ஜனாதிபதி, நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தில் ஏனைய அரசியல் கட்சிகளின் அனைத்து சாதகமான முன்மொழிவுகளையும் உள்ளடக்குவதற்கு தயங்கமாட்டேன் என்றும் தெரிவித்தார்.

வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு தொடர்பான சர்வதேச நாணய நிதியத்துடன் அடுத்த மாதம் நடைபெறவுள்ள பேச்சில் ஏனைய அரசியல் கட்சிகளும் பங்கேற்க சந்தர்ப்பம் வழங்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க விடுத்த கோரிக்கைக்கு ஜனாதிபதி நல்ல பதிலை வழங்கினார் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ்ஸும் வானும் நேருக்கு நேர் மோதி விபத்து! – இருவர் காயம்.

தென்மராட்சியில் யுவதியின் சடலம் மீட்பு!

“நாட்டுக்கான ஒன்றுபட்ட நடவடிக்கை” ஐக்கிய குடியரசு முன்னணியின் முன்மொழிவு ஜனாதிபதியிடம்! – இன்று கையளித்தார் சம்பிக்க.

பணி நேரத்தில் ஒப்பந்த கொலை செய்த , செங்கலடி இராணுவ முகாம் கோப்ரல் கைது

கைத்தொலைபேசி திருடி விற்ற குற்றச்சாட்டில் ஒருவர் சிக்கினார்.

Leave A Reply

Your email address will not be published.