கடலிலிருந்து கரியமிலவாயுவை உறிஞ்சும் சிங்கப்பூரின் ஆலை.

வளிமண்டலத்தில் இருந்து கரியமிலவாயுவை உறிஞ்சும் கடலின் ஆற்றலைப் பெருக்க உலகின் ஆகப்பெரிய ஆலையை சிங்கப்பூர் அமைக்க உள்ளது.

பருவநிலை மாற்றத்தைச் சமாளிக்கும் சிங்கப்பூரின் முயற்சிகளில் இதுவும் ஒன்று.

US$20 மில்லியன் (S$27 மில்லியன்) செலவில் உருவாகும் அந்த ஆலை, செயல்படத் தொடங்கியதும் கடலில் இருந்து ஆண்டுக்கு 3,650 டன் கரியமிலவாயுவை அகற்ற உதவும்.

அத்துடன், பொதுப் பயனீட்டுக் கழகத்தின் நீர்ச் சுத்திகரிப்பு நடைமுறையில் பின்பற்றப்படும் கரிமநீக்கத்திற்கும் அந்த ஆலை உதவும்.

கழகம் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 27) இதனைத் தெரிவித்தது.

கடல்நீர் மீண்டும் கடலுக்கே அனுப்பப்படுவதால், வளிமண்டலத்தில் இருந்து மேலும் அதிகமான கரியமிலவாயுவை உறிஞ்சும் ஆற்றலைக் கடல் பெறும்.

கழகம் நிர்வகிக்கும் இரண்டு சிறிய ஆலைகள் கரியமிலவாயுவை நீக்குவதில் திறம்படச் செயல்பட்டதைத் தொடர்ந்து ஆகப்பெரிய ஆலையைக் கட்டுவதற்கான திட்டம் உதயமானது.

துவாசிலுள்ள, கடல் நீரைக் குடிநீராக்கும் ஆலை, அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் கரிம நிர்வாகக் கழகத்தில் உள்ள ஓர் ஆலை ஆகியன அந்த சிறிய ஆலைகள்.

2023 ஏப்ரலில் நிறுவப்பட்ட அந்த இரு ஆலைகளும் கடலில் இருந்து தினமும் 100 கிலோகிராம் எடையுள்ள வாயுக்களை வெளியேற்றும் ஆற்றலைப் பெற்றுள்ளன.

கடலிலிருந்து கரியமிலவாயுவை அகற்றக்கூடிய தொழில்நுட்பத்தை புதிய அமெரிக்க நிறுவனமான ஈக்குவாட்டிக் வடிவமைத்து உள்ளது.

அருகில் உள்ள, கடல்நீரைக் குடிநீராக்கும் ஆலையில் இருந்து மின்சாரம் மூலம் கடலுக்கு நீர் அனுப்பப்படும்.

அந்தப் புதிய முறை பல்வேறு வேதி மாற்றங்களுக்கு இட்டுச் செல்லும். அந்த மாற்றங்களின் விளைவாக ஹைட்ரஜனாகவும் ஆக்சிஜனாவும் கடல்நீரைப் பிரிக்கும்.

Leave A Reply

Your email address will not be published.