வெடிகுண்டு பேக்கை வைத்துச் சென்ற மர்ம நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். !

குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். ஏ.ஐ தொழில்நுட்பத்தில் அடையாளம் காணப்பட்ட முகம் கண்காணிப்பு கேமராவில் பதிவான புகைப்படத்துடன் ஒத்துப்போகிறது. எனவே குற்றவாளி ஓரிரு நாள்களில் கைதுசெய்யப்படுவார்.” – சிவக்குமார்

பெங்களூரு ஒயிட்ஃபீல்டு அருகில் உள்ள குண்டனஹள்ளி என்ற இடத்தில் செயல்பட்டு வரும் ராமேஸ்வரம் கஃபேயில் நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் சக்தி குறைந்த வெடிகுண்டு வெடித்ததில், 9 பேர் காயமடைந்தனர். இக்குண்டு வெடிப்பு பெங்களூரு மக்களை மிகவும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் தீவிரவாத தடுப்பு படையினரும், மத்திய புலனாய்வு ஏஜென்சி அதிகாரிகளும் பார்வையிட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். வெடிகுண்டை வைத்துவிட்டு சென்ற குற்றவாளி ஏ.ஐ தொழிற்நுட்பத்தின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளார். வெடிகுண்டை வைத்துவிட்டு சென்ற நபர் முகக்கவசம் அணிந்தபடி வந்திருந்தார். இது குறித்து துணை முதல்வர் சிவக்குமார் கூறுகையில், “குற்றவாளி அடையாளம் காணப்பட்டுள்ளார். ஏ.ஐ தொழில்நுட்பத்தில் அடையாளம் காணப்பட்ட முகம் கண்காணிப்பு கேமராவில் பதிவான புகைப்படத்துடன் ஒத்துப்போகிறது. எனவே குற்றவாளி ஓரிரு நாள்களில் கைதுசெய்யப்படுவார். குற்றவாளியை கண்டுபிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களுக்கு போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்”எ ன்றார்.
போலீஸார் நடத்திய விசாரணையில், “வெடிகுண்டை வைத்த நபர் ரெஸ்டாரன்ட் இருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் பஸ்ஸில் வந்து இறங்கினார். முகக்கவசம் அணிந்தபடி ரெஸ்டாரன்ட்டிற்கு சென்று கேஷ் கவுன்ட்டரில் பணம் கட்டி, இட்லிக்கு டோக்கன் வாங்கினார். பின்னர் இட்லியை சாப்பிட்டுவிட்டு தன்னுடன் எடுத்து வந்த பேக்கை குப்பைத்தொட்டி அருகில் வைத்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார். அந்த நபர் ரெஸ்டாரன்ட்டில் வெறும் 7 நிமிடங்கள் மட்டுமே இருந்துள்ளார். அவர் சென்ற ஒரு மணி நேரம் கழித்து வெடிகுண்டு வெடித்திருக்கிறது. வெடி குண்டில் நேரம் செட் செய்து வைத்து வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளார்” என்று தெரியவந்துள்ளது. வெடி குண்டு வெடித்த இடத்திற்கு வெடி குண்டுகளை கண்டுபிடிக்கும் படையினர் மிகவும் தாமதமாக வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

வழக்கமாக தடயவியல் நிபுணர்கள் வரும் முன்பாக வெடி குண்டுகளை கண்டுபிடிக்கும் நிபுணர்கள் வருவது வழக்கம். ஆனால் வெடிகுண்டு வெடித்து இரண்டு மணி நேரம் கழித்துத்தான் வெடிகுண்டு நிபுணர்கள் வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வெடிகுண்டு வெடித்ததில் காயமடைந்த சிலருக்கு காது கேட்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரம் கஃபேயில் செக்யூரிட்டி கார்டாக வேலை செய்யும் ரமேஷ் இது குறித்து கூறுகையில், “வெடிகுண்டு வெடித்த 15 நிமிடங்கள் எனக்கு வெளியில் நடக்கும் எதுவும் கேட்கவேயில்லை. ரெஸ்டாரன்ட் முழுவதும் கரும்புகையால் சூழ்ந்து இருந்தது. சிலர் ஓடினர். சிலர் தரையில் விழுந்து கிடந்தனர். என்ன நடந்தது என்று என்னால் யூகிக்க முடியவில்லை” என்றார்.

வெடிகுண்டு வெடித்தபோது ரெஸ்டாரன்ட்டில் 250 வாடிக்கையாளர்கள் இருந்தனர். அதில் பெரும்பாலானோர் ஐ.டி கம்பெனி ஊழியர்கள். வெடிகுண்டு சக்தி வாய்ந்ததாக இருந்திருந்தால், உயிரிழப்புகள் அதிகமாக இருந்திருக்கும் என்று சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.