தென்னிலங்கையை உலுக்கிய வேட்டு! ஒரே இரவில் அறுவர் சுட்டுக்கொலை!!

தென்னிலங்கையில் வெவ்வேறு இடங்களில் ஒரே இரவில் 6 பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

காலி மாவட்டத்தில் 4 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 2 பேரும் நேற்றிரவு இவ்வாறு சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

காலி, எல்பிட்டி – பிடிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவல பிரதேசத்தில் கடையொன்றுக்கு அருகில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.

ஒருவர் சம்பவ இடத்திலும், மற்றைய நபர் வைத்தியசாலையிலும் சாவடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தப் படுகொலைக்கு ரி – 56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி, அம்பலாங்கொடை – கலகொட பிரதேசத்தில் கடையொன்று மீது நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 2 ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இந்தப் படுகொலைக்கும் ரி – 56 ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த மூவர் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கம்பஹா, பியகம பிரதேசத்தில் நேற்றிரவு 28 வயதுடைய இளைஞன் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மேற்படி நபர், வீட்டுக்கு அருகில் வைத்து கைத்துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஓட்டோவில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இது இவ்வாறிருக்க, கம்பஹா, ஜா – எல பிரதேசத்தில் நேற்றிரவு 41 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி நபர், வீட்டில் வைத்து கைத்துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

தென்னிலங்கையை உலுக்கிய இந்தப் படுகொலைச் சம்பவங்கள் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.