ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் மாகாண சபைத் தேர்தலும் நடக்கும் – திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி. உறுதி.

ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்ற பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் மாகாண சபைத் தேர்தலும் விரைவில் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தேசிய அமைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“ஜனாதிபதியால் காணாமல் ஆக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களையும் நடத்த வேண்டியுள்ளது. அதிகாரப் பகிர்வு கோட்பாட்டின் அடிப்படையில்தான் மாகாண சபை உருவாக்கப்பட்டது. அந்தச் சபைகளை ஆளுநர்கள்தான் தற்போது நிர்வகிக்கின்றனர். மக்கள் பிரதிநிதிகள் இல்லை. இதுகூட அரசமைப்பு மீறல் செயலாகும்.

எனவே, ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ வெற்றி பெற்ற பின்னர் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படும். ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சியின்கீழ் அதன்பின்னர் கூடிய விரைவில் மாகாண சபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும். மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்போம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.