டில்லி கெப்பிட்டல்ஸிடம் வீழ்ந்தது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி.

பிரித்திவி ஷாவின் அதிரடி ஆட்டத்தால் டில்லி கப்பிட்டல்ஸ் அணியிடம் 44 ஓட்டங்களால் வீழ்ந்தது சென்னை சுப்பர் கிங்ஸ் அணி.

ஐ.பி.எல். ரி – 20 தொடர் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், டில்லி கப்பிட்டல்ஸ்ம் மோதியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பைத் தெரிவு செய்தது.

பிரித்திவி ஷா, தவான் இணை தொடக்கம் கொடுத்தது. இருவரும் மிகச் சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்தனர். ஷா அதிரடியாக ஆடி அரைச்சதம் கடந்தார். அவருக்குத் துணையாக நின்று பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் தவான்.  இருவரும் 94 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்றிருந்த நிலையில் ஷிகர் தவான் 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அடுத்து ரிஷப் பந்த் களமிறங்கிய சிறிது நேரத்திலேயே 43 பந்துகளில் ஒரு சிக்ஸர், 9 பௌண்டரிகளுடன் 64 ஓட்டங்களைப் பெற்றிருந்த வேளையில் டோனியால் ஸ்ரொம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

ரிஷப் பந்துடன் இணைந்த ஐயர் நிலைத்து ஆட முற்பட்டார். ஆனால், 26 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ரிப் அவுட் ஆகி வெளியேறினார்.

20 ஓவர்களில் 3 விக்கெட்களை 175 ஓட்டங்களைப் பெற்றது. ரிஷப் பந்த் 37 ஓட்டங்களுடனும், ஸ்ரொய்னிஸ் 5 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சென்னையின் பந்து வீச்சில் சாவ்லா 2 விக்கெட்களையும் குர்ரன் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

176 என்ற இலக்கை சென்னை இலகுவாகத் தொட்டுவிடும் என்று ரசிகர்கள் எண்ணினர். ஆனால், தொடக்கம் கொடுத்த முரளி விஜய் 10, ஷேன் வற்சன் 14 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர். டூ பிளசிஸ் நிலைத்தாட, பின்னர் வந்த கய்க்வட் 5 ஜாதவ் 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

நிதானமாக ஆடிய டூ பிளசிஸ் 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அதிரடி காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட டோனியும் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்று 44 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

டில்லியின் பந்து வீச்சில் ரபாடா 3, நோர்ற்ஜே 2 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

ஆட்டநாயகனாக பிரித்திவி ஷா தெரிவானார்

Leave A Reply

Your email address will not be published.