தமிழர்களைச் சோதிக்காதீர்; வீண்விளைவைச் சந்திப்பீர்! – ராஜபக்ச அரசுக்கு சம்பந்தன் கடும் எச்சரிக்கை

“அடுக்கடுக்கான தடையுத்தரவுகள் மூலம் தமிழர்களின் பொறுமையைச் சோதித்தால் வீண்விளைவுகளை ராஜபக்ச அரசு சந்திக்க வேண்டி வரும்.”

– இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.

தமிழர் தாயகத்தில் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு நீதிமன்றங்கள் தடையுத்தரவு வழங்கியிருந்த நிலையில், நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி வடமராட்சி தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வளாகத்தில் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், நேற்று வல்வெட்டித்துறைப் பொலிஸார் மேற்கொண்ட தடையுத்தரவு கோரிய மனுத் தாக்கலை அடுத்து அங்கு உண்ணாவிரதப் போராட்டம் நடத்த முடியாது என்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் ஊடகங்கள் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“பொலிஸாரைக் கொண்டு நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்று தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலைத் தடுத்த ராஜபக்ச அரசு, தற்போது நினைவேந்தல் உரிமையை வலியுறுத்தி தமிழ்த் தேசியக் கட்சிகள் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ள உண்ணாவிரதப் போராட்டத்துக்கும் தடையுத்தரவைப் பெற்றுள்ளது. தமிழர்களின் அடிப்படை உரிமைகளை நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாகத் தட்டிப் பறிக்கும் ராஜபக்ச அரசின் மோசமான செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

எத்தனை தடைகளை இலங்கை அரசு போட்டாலும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்து தமது உறவுகளைத் தமிழர்கள் நினைவுகூர்ந்த வரலாறையும், அறவழியில் உரிமைக்காகப் போராடிய காலத்தையும் இந்த அரசு மறக்கக்கூடாது.

பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்பதைத் தமிழர்கள் பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசுக்குப் புரியவைத்துள்ளார்கள். எனவே, தமிழர்களின் அடிப்படை உரிமைகளில் கைவைப்பதை ராஜபக்ச அரசு உடன் நிறுத்த வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.