கடைசி ஓவரில் அசத்திய ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கடைசி ஓவரில் அசத்திய ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்றது.

இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் நடக்கிறது. மொகாலியில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகள் மோதின. லேசான காயத்தால் பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் விலகினார். சாம் கர்ரான் அணியை வழிநடத்தினார். ‘டாஸ்’ வென்ற ராஜஸ்தான் அணி ‘பீல்டிங்’ தேர்வு செய்தது.

பஞ்சாப் அணிக்கு அதர்வா (15), பேர்ஸ்டோவ் (15) ஜோடி சோபிக்கவில்லை. பிரப்சிம்ரன் சிங் (10), கேப்டன் சாம் கர்ரான் (6), சஷாங்க் சிங் (9) நிலைக்கவில்லை. ஜிதேஷ் சர்மா (29), லிவிங்ஸ்டன் (21) ஆறுதல் தந்தனர். அஷுதோஷ் சர்மா (31) ஓரளவு கைகொடுத்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 147 ரன் எடுத்தது. பிரார் (3) அவுட்டாகாமல் இருந்தார். ராஜஸ்தான் சார்பில் அவேஷ் கான், மகாராஜ் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

சுலப இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (39), தனுஷ் (24) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் (18), ரியான் பராக் (23) ஓரளவு கைகொடுத்தனர். துருவ் ஜுரெல் (6) ஏமாற்றினார். ஹர்ஷல் படேல் வீசிய 18வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார் ஹெட்மயர். சாம் கர்ரான் வீசிய 19வது ஓவரில் பாவெல் (11), கேஷவ் மகாராஜ் (1) அவுட்டாகினர்.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன் தேவைப்பட்டன. அர்ஷ்தீப் சிங் பந்துவீசினார். முதலிரண்டு பந்துகளை வீணடித்த ஹெட்மயர், அடுத்த பந்தை சிக்சருக்கு அனுப்பினார். நான்காவது பந்தில் 2 ரன் எடுத்த ஹெட்மயர், அடுத்த பந்தை சிக்சருக்கு அனுப்பி வெற்றியை உறுதி செய்தார். ராஜஸ்தான் அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 152 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஹெட்மயர் (27) அவுட்டாகாமல் இருந்தார். பஞ்சாப் சார்பில் ரபாடா, சாம் கர்ரான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

Leave A Reply

Your email address will not be published.