நீதிமன்றத்தை அவமதிக்கும் லால்காந்தவின் கருத்தால் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை!

தமது ஆட்சியில் நீதிமன்றத்தின் அதிகாரத்தைச் செயற்படுத்தும் அதிகாரத்தை தமது உறுப்பினர்களுக்கு வழங்குவோம் என ஜே .வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மூத்த தலைவர்களில் ஒருவருமான லால்காந்த குறிப்பிட்ட விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டதுடன் அரச மற்றும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஜே .வி.பி.யை வசைபாடினர்.

ஜே வி.பி.யின் கடந்த காலப் படுகொலைகள், அட்டூழியங்கள், அரச விரோத செயல்கள் தொடர்பில் அரச மற்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பட்டியலிட்டதுடன் அவை தொடர்பில் விசாரணைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியதுடன் சபையில் தனி ஒருத்தியாக இருந்த ஜே .வி.பி. (தேசிய மக்கள் சக்தி) எம்.பி. ஹரிணி அமரசூரியவிடம் கேள்விக்கணைகளைத் தொடுத்தபோது அவரும் அவர்களுடன் சளைக்காது வாதாடினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (07) நடைபெற்ற பிரிவிடல் (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்கள் அறவிடல் (விசேட ஏற்பாடுகள்) திருத்தச் சட்டமூலம் (பராட்டே) என்பன மீதான விவாதத்தில் உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க,

“மக்கள் விடுதலை முன்னணியின் செயற்பாடுகள் தொடர்பில் நாட்டு மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தில் அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் தமது ஆட்சியில் நீதிமன்றத்தின் அதிகாரத்தைச் செயற்படுத்தும் அதிகாரத்தைத் தமது உறுப்பினர்களுக்கு வழங்குவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

1971, 1988, 1989, 2022 ஆகிய காலப்பகுதிகளில் மக்கள் விடுதலை முன்னணி செயற்பட்ட விதம் நினைவுக்கு வருகின்றது. காட்டுமிராண்டித்தனமாக அரச அதிகாரத்தைக் கைப்பற்ற முயற்சிக்கும் இவர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதா என்பதனை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.

பொலிஸ் மற்றும் நீதிமன்றத்தின் அதிகாரத்தைத் தமது உறுப்பினர்களுக்கு வழங்குவதாகக் குறிப்பிடுவதனை தேசிய மக்கள் சக்தியின் எம்.பி. ஹரிணி அமரசூரிய ஏற்றுக்கொள்வாரா என்பதனை அவரிடம் வினவுகின்றேன்.” – என்றார்.

இதன்போது எழுந்து பதிலளித்த ஹரிணி அமரசூரிய எம்.பி, “நீதிமன்றத்தின் அதிகாரத்தைச் செயற்படுத்தலை மக்கள் விடுதலை முன்னணிக்கும் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்களுக்கும் வழங்குவதாக நாம் ஒருபோதும் குறிப்பிடவில்லை.” – என்றார்.

இதன்போது, ”லால்காந்த குறிப்பிட்டார், லால்காந்த குறிப்பிட்டார்” என அரச, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூச்சலிட்டனர்.

தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, “ஹரிணி அமரசூரிய போன்ற படித்த உறுப்பினர் ஒருவர் மக்கள் விடுதலை முன்னணி போன்ற காட்டுமிராண்டித்தனமான கட்சியின் மேடையில் ஏறி தனது கொள்கையை மாற்றிக்கொண்டது கவலைக்குரியது. தவறான பக்கம் சென்று விட்டார்.” – என்றார்.

இதன்போது எழுந்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ, “1988, 1989 காலப்பகுதிகளில் 27 நீதிமன்றக் கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. நுகேகொடை, கல்கிஸை, ஹோமாகம ஆகிய நீதிமன்றங்களின் மீது மிக மோசமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஹோமாகம நீதிமன்றத்தின் நீதிபதியின் கறுப்பு மேலங்கி பலவந்தமாகக் கழற்றப்பட்டு மாட்டின் மீது அந்த அங்கி அணிவிக்கப்பட்டு மாடு வீதியில் விரட்டப்பட்டது. மக்கள் மத்தியில் இன்றும் அந்த அச்சம் காணப்படுகின்றது.” – என்றார்.

இதன்போது, “நீதிமன்றம் மற்றும் பொலிஸ் அதிகாரத்தைச் சாதாரண மக்களுக்கு வழங்குவதனை ஹரிணி அமரசூரிய எம்.பி. ஏற்றுக்கொள்வாரா?” – என அரச மற்றும் எதிரணி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர்.

இதன்போது மீண்டும் எழுந்த ஹரிணி அமரசூரிய எம்.பி., “நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் கட்சியின் உறுப்பினர்களுக்கு வழங்குவதனை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.” – என்றார்.

தொடர்ந்தும் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, “மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் (லால்காந்த) குறிப்பிட்ட குரல் பதிவு என்னிடம் உள்ளது. அதனை ஒலிபரப்ப அனுமதி வழங்குங்கள்.” – என்று சபைக்குத் தலைமை தாங்கிய உறுப்பினரிடம் கேட்டார்.

இதற்குப் பதிலளித்த சபைக்குத் தலைமை தாங்கிய கிங்க்ஸ் நெல்சன் எம்.பி., “அனைவரிடமும் குரல் பதிவு உள்ளது. அனைவரும் ஒலிபரப்புச் செய்தால் அது பிரச்சினையாகும். அத்துடன் வெளி நபர்களின் குரல்களை சபையில் ஒலிபரப்ப முடியாது.” – என்றார்.

இதன்போது ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான ஹர்ஷண ராஜகருணா, “மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் லால்காந்த குறிப்பிட்டதாகக் கூறும் குரல் பதிவை சபையில் ஒலிபரப்புச் செய்து சட்டத்தை தனிநபர் ஒருவர் செயற்படுத்தும்போது அதன் விளைவு பாரதூரமாக அமையும். ஆகவே. அவரின் கருத்து எமக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதால் இதனை அலட்சியப்படுத்த முடியாது. எனவே, இது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும்.” – என்று நீதி அமைச்சரிடம் வலியுறுத்தினார்.

இது தொடர்பில் அரச எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலரும் ஜே .வி.பி. மீது கடும் கண்டனங்களை வெளியிட்டு கருத்துக்களை வெளியிட்டதால் சபை அரைமணிநேரம் அமளிதுமளிப்பட்டது.

இறுதியில் நீதிமன்றத்தின் அதிகாரத்தைக் கட்சியின் உறுப்பினர்களுக்கு வழங்குவதாகக் குறிப்பிடுவது நீதிமன்றத்தை அவமதிப்பதாக அமையும். ஆகவே, இந்த விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆளும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நீதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

Leave A Reply

Your email address will not be published.