பத்தாண்டுகளுக்குப் பிறகு எழுச்சிபெற்ற காங்கிரஸ் கட்சி

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலையில் வெளிவரத் தொடங்கியது முதலே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கும் இடையில் கடும் போட்டி நிலவியது.

2019 தேர்தலில் வென்ற 303 தொகுதிகளைக் காட்டிலும் அதிகமாக வெல்லும் என்று கணிக்கப்பட்ட பாஜக 250 தொகுதிகளுக்கும் குறைவாக வெற்றியைப் பதிவு செய்து வந்த நிலையில் எதிர்த்திசையில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றதைக் காணமுடிந்தது.

குறிப்பாக, 2014 தேர்தல் தொடங்கி இந்த பத்தாண்டுகளில் நடைபெற்ற மூன்று தேர்தல்களில் இந்தத் தேர்தலில்தான் காங்கிரஸ் கட்சி மூன்று இலக்கத்தை நோக்கி முன்னேறியது.

இந்தச் செய்தி எழுதும் நேரத்தில் 98 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி அல்லது முன்னணி என்ற நிலையில் இருந்தது.

மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் 2014 தேர்தலில் வெறும் 44 இடங்களை மட்டுமே காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது.

ஐந்தாண்டுகள் கழித்து 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரிய வித்தியாசம் எதுவும் அந்தக் கட்சியிடம் காணப்படவில்லை. அந்தத் தேர்தலில் அக்கட்சி 52 தொகுதிகளில் வென்றது.

ஆயினும், இம்முறை அந்தக்கட்சி 90 தொகுதிகளைக் கடந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி 100ஐ தொடும் நிலையில் அக்கட்சியின் வெற்றி பதிவாகிக் கொண்டு இருந்தது.

காங்கிரசின் இந்த திடீர் எழுச்சி பாஜக மற்றும் அது அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு விழுந்த பேரிடியாகக் கருதப்படுகிறது.

நாடு முழுவதும் இருபதுக்கும் மேற்பட்ட கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ என்ற பெயரில் கூட்டணி அமைத்து போட்டியிட்டபோதிலும் காங்கிரஸ் மட்டும் எத்தனை தொகுதிகளில் வெல்லும் என்ற எதிர்பார்ப்பு தொடக்கம் முதலே இருந்து வந்தது.

காங்கிரஸ் மீண்டெழுந்தது ஆளும் பாஜக அரசு மீதான வெறுப்பை உணர்த்துகிறதா அல்லது இந்தியா முழுவதும் ராகுல் காந்தி கடந்த ஆண்டு நடத்திய நடைப்பயணத்தின் விளைவா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

2019 தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி குறித்து அவதூறாகப் பேசியதாக ராகுல் காந்திக்கு ஈராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை மக்கள் ஏற்கவில்லையா என்பதும் ஒரு கேள்வியாக இப்போது எழுப்பப்படுகிறது.

காங்கிரசின் வெற்றி, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் இண்டியா கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்ற உதவியது. அந்தக் கூட்டணி உதயமாகி ஏறத்தாழ ஓராண்டுதான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.