ரிஷாத்தின் சகோதரர் ரியாஜ் 5 மாதங்களின் பின் விடுதலை

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு, பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வந்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாத் பதியுதீனின் இளைய சகோதரர் ரியாஜ் பதியுதீன் 5 மாதங்களின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து நேற்று மாலை 5 மணியளவில் இவ்வாறு விடுவிக்கப்பட்ட ரியாஜ் பதியுதீன், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து வெளியேறினார் என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 14ஆம் திகதி, புத்தளத்தில் அமைந்துள்ள ரியாஜ் பதியுதீனின் வீட்டில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் அவரைக் கைது செய்திருந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ரியாஜ் பதியுதீனுடன் கைதுசெய்யப்பட்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ், மொஹமட் அமீன் மொஹமட் அஸ்மின் எனும் கோடீஸ்வர வர்த்தகர் மற்றும் சுங்க அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 6 பேரும் தற்போது வரை குற்றப்புலனாய்வுத்திணைக்களத்தின் தடுப்புக்காவலில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர் என்பதுகுறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.