ஹர்ஷ டி சில்வாவின் உயிருக்கு ஆபத்து..!: குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.

SJB பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவிற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக கூறப்படுவது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பித்துள்ளன.

பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் இது தொடர்பான பணிப்புரைகளை பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அதன்படி குற்றப்புலனாய்வு திணைக்கள பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அரச தரப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களால் நிதிக்குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (07) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

விஎப்எஸ் விசா பரிவர்த்தனையில் என்ன நடந்தது என்பதை நிதிக் குழு வெளிப்படுத்த முயற்சித்ததே இதற்குக் காரணம் எனவும் , மத்திய வங்கி ஒப்பந்தத்தை விட இந்த ஒப்பந்தம் அதிக அழிவை ஏற்படுத்தியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீசா கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நிதிக் குழு விசாரணை நடத்த முயற்சித்த போதிலும், குழுவொன்று அதனை நாசப்படுத்தியதாக நிதிக் குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த நிலையில் தனது பாதுகாப்பை பலப்படுத்துமாறு சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.