காஷ்மீரில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் தாக்குதல் (வீடியோ)

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாணம் நேற்று, ஞாயிற்றுக்கிழமை (9) புதுடெல்லி நகரில் இடம்பெற்றதுடன், விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக, அதாவது மாலை 6.15 மணியளவில், ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில், பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் குழு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இச்சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக இந்திய அதிகாரிகள் இன்று (10) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் உள்ளூர் பொலிஸார் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்களில் இரண்டு வயது சிறுவனும், ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்தவர்களும் அடங்குவதாக கூறப்படுகிறது.

கட்ராவில் உள்ள புகழ்பெற்ற இந்து கோவிலான மாதா வைஷ்ணோ தேவிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து மலைப்பாதையில் சென்று கொண்டிருந்த போது, பேருந்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது . சுமார் 20 நிமிடம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப் பகுதியில் உள்ள பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்தது. ஆன்லைனில் பரவும் மற்றும் இந்திய ஊடகங்களால் ஒளிபரப்பப்படும் வீடியோக்கள், சாலையின் ஓரத்தில் ஓடும் பாறை சரிவில் உடல்கள் கிடப்பதைக் காட்டுகிறது.

மேலும், தீவிரவாத தாக்குதலுக்கு முந்தைய தருணங்கள் அடங்கிய சிசிடிவி காட்சிகளை இந்திய அதிகாரிகள் இன்று ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

இத்தாக்குதலில் மூன்று வெளிநாட்டு பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ளதை கண்டுபிடித்துள்ளதாகவும், இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதியில் மூன்று பயங்கரவாத குழுக்கள் இயங்கி வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் 6 பேர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு Lashkar-e-Taiba அமைப்பு உரிமை கோரியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.