அறவழிப் போராட்டங்களை நடத்தி என்ன பயனைக் கண்டனர் தமிழர்?- இப்படிக் கேட்கின்றது ராஜபக்ச அரசு

“வடக்கு, கிழக்கில் தமிழர்கள் ‘உரிமைகள் வேண்டும்’ என்ற கோஷத்துடன் கடந்த காலங்களிலும், தற்காலத்திலும் அறவழிப் போராட்டங்களை நடத்தி என்ன பயனைக் கண்டார்கள்? ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டமு, ஒரு நாள் ஹர்த்தால் போராட்டமும்தான் அவர்களின் தற்போதைய அறவழிப் போராட்டங்களா?”
– இவ்வாறு கேள்விக்கணைகளைத் தொடுத்துள்ளார் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல.
“தமிழர்கள் அறவழியில் போராடியோ அல்லது மீண்டும் ஆயுதம் தூக்கிப் போராடியோ அரசை ஒருபோதும் மிரட்ட முடியாது. அரசு நடுநிலையுடன் செயற்படுகின்றது. இதைத் தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் கூறிவைக்க விரும்புகின்றோம்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
‘வடக்கு, கிழக்கில் தமிழ்பேசும் உறவுகளை அடக்கியாள முடியும் என்று ராஜபக்ச அரசு இனியும் எண்ணவேகூடாது. கடந்த 26ஆம் திகதியும், 28ஆம் திகதியும் இங்கு நடைபெற்ற அரசுக்கு எதிரான அறவழிப் போராட்டங்களின் வெற்றிச் செய்திகள் இதற்கு உதாரணங்களாக உள்ளன’ என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“சிங்களவர்களைப் போல் தமிழர்களும் சகல உரிமைகளையும் இந்த நாட்டில் அனுபவிக்கின்றார்கள். அவர்கள் தற்போது பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூரவே அனுமதி கேட்டு உண்ணாவிரதப் போராட்டத்தையும், ஹர்த்தால் போராட்டத்தையும் நடத்தியுள்ளார்கள். தமிழ்க் கட்சிகளின் வற்புறுத்தலின் பேரிலேயே தமிழர்கள் இந்த ஒரு நாள் போராட்டங்களில் ஈடுபட்டார்கள். இதனால எந்தப் பயனையும் தமிழர்களும், தமிழ்க் கட்சியினரும் பெறமாட்டார்கள்.
இந்த ஏமாற்றுப் போராட்டங்கள் வெற்றியடைந்துள்ளன என்று தமிழ்த் தலைவர்கள் கனவு காண்கின்றார்கள். ஒரு நாள் போராட்டங்கள் வெற்றியடைந்தன எனின், சுமார் 70 வருடங்களாக தமிழர்கள் ஏன் அறவழியிலும், ஆயுதம் தூக்கியும் போராடினார்கள். தமிழ்த் தலைவர்களின் இந்த ஏமாற்று வேலைகளுக்கு வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் இனியும் துணைபோகக்கூடாது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.