கடும் அதிருப்தியில் சு.க. ; பலத்தை இழக்குமா அரசு?

<strong>- தயாசிறியின் பகிரங்கக் குற்றச்சாட்டால்
கொழும்பு அரசியலில் பெரும் பரபரப்பு</strong>

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான தற்போதைய அரசின் முக்கிய பங்காளியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மிகவும் அதிருப்தியில் இருக்கின்றது என அக்கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசை வெற்றியடையச் செய்த சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள், உறுப்பினர்களுக்கு அரசிடமிருந்து இதுவரை எந்தவொரு மதிப்போ அல்லது நன்றிக்கடனோ கிடைக்கவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற நேர்காணலில் கலந்துகொண்ட அவர் இந்த மனக்குமுறல்களை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் அரசால் ஒதுக்கீடு செய்யப்படுகின்ற நிதிகளிலும் சுதந்திரக் கட்சியின் பிரதிநிதிகளுக்கு மிகக்குறைவான அளவே கிடைக்கின்றன எனவும் இராஜாங்க அமைச்சர் தயாசிறி குறிப்பிட்டுள்ளார்.

மிக விரைவில் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று கூறியுள்ள அவர், இல்லாவிட்டால் தனது பெயரே சீர்கெட்டுவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவு தற்சமயம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் அது நிறைவேற்றப்படும் என்று அரசு தெரிவித்து வருகின்றது.

பொதுஜன முன்னணி அரசில் சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் இருக்கின்றார்கள். இவர்களுடன் சேர்த்தே 146 உறுப்பினர்கள் மொட்டுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றத்தில் உள்ளனர்.

சிலவேளைகளில் சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்களது பலம் நாடாளுமன்றத்தில் மொட்டுக் கட்சிக்குக் கிடைக்காவிடத்து, பெரும்பான்மைப் பலத்தை நிரூபிப்பதற்கு பொதுஜன முன்னணி அரசு சவாலைச் சந்திக்க நேரிடலாம் என்று அரசியல் அவதானிகள் எச்சரித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.