கொரோனா பரவலுக்கு அரசே முழுப் பொறுப்பு.

கொரோனா பரவலுக்கு
அரசே முழுப் பொறுப்பு

ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு

“அரசின் பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாகவே, தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். எனவே, கொரோனா வைரஸ் பரவல் கொத்தணி தொடர்பில் அரசே பொறுப்புக் கூறவேண்டும்.”

– இவ்வாறு வலியுறுத்தினார் ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் அரசாசு, அதன் பழியை மக்கள் மீது சுமத்திவிட்டு, தொடர்ந்தும் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றிக் கொள்ளவே முயற்சித்து வருகின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

சிக்கலான ஏற்பாடுகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 20 ஆவது திருத்தச் சட்ட வரைவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருமே ஆதரவு வழங்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசு கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் பரவலை வெற்றிகொள்வதைவிட, 19ஆவது திருத்தச் சட்டத்தைத் தோல்வியடையச் செய்வது தொடர்பிலே கவனம் செலுத்தி வந்தது. இதனால் வைரஸ் பரவல் தொடர்பான அவதானத்தைக் கருத்தில்கொள்ளாது செயற்பட்டு வந்தது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அரசின் தலைவர்கள் பலர் தாங்கல் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தினோம் எனவும், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்திய நாடுகளில் இலங்கை இரண்டாம் இடத்தைப்  பிடித்துள்ளதாகவும் கூறிக்கொண்டு பெருமைப்பட்டுக் கொண்டிருந்தனர்.

இதனால் மக்கள் கொரோனா வைரஸ் பரவல் தொடர்பில் கவனம் செலுத்துவதைக் கைவிட்டனர். தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில், இந்த நிலைமைக்கு மக்களே பொறுப்புக் கூறவேண்டும் என்று தெரிவிக்க அரசு முற்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களைக் கண்டறிவதற்கான பி.சி.ஆர். பரிசோதனைகளை அதிகரிக்குமாறு உலக சுகாதார ஸ்தாபனமும் , சுகாதாரப் பிரிவுகளும் ஆலோசனை வழங்கி வந்த போதிலும் அரசு அது தொடர்பில் முழுமையான கவனத்தைச் செலுத்தவில்லை.

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றும் மாணவர்கள் அச்சம் நிறைந்த சூழலில் பரீட்சையில் தோற்ற வேண்டிய சூழ்நிலையையும் அரசே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

இந்தநிலையில், வைரஸ் பரவல் தொடர்பான பழியை மக்கள் மீது அரசு சுமத்திவிட்டு, தொடர்ந்தும் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றிக்கொள்ளவே முயற்சித்து வருகின்றது.

20 ஆவது திருத்த சட்ட வரைவில் காணப்படும் சிக்கலான ஏற்பாடுகள் மற்றும் ஜனநாயகத்துக்கு ஏற்படும் பாதிப்புகளைக் கருத்தில்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தெளிவாகச் சிந்தித்து கட்சி, பேதமின்றி தங்களது மனச்சாட்சிக்கமைய தீர்மானத்தை எடுக்க வேண்டும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.