‘இத்தருணத்துக்காகவே தினப்பொழுதும் வாழ்ந்தேன்’ – உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டியில் வாகை சூடிய குகேஷ்
உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டியில் 2013க்குப் பின் மீண்டும் இந்தியக் கொடியைப் பறக்க விட்டுள்ளார் குகேஷ் தொம்மராஜு, 18.
ஆர்க்கிட் மாலை அணிவிக்கப்பட்டு இந்தியக் கொடி போர்த்தப்பட்டு அவர் உலகச் சதுரங்க வெற்றியாளராக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 13) மாலை 6 மணியளவில் ஈகுவாரியஸ் விடுதியில் முடிசூட்டப்பட்டார். வெற்றிக் கிண்ணத்தை அவர் தலைக்குமேல் உயர்த்திய சமயத்தில் 300க்கும் மேற்பட்டோர் திரண்ட அரங்கமே முழக்கங்களோடும் கரவொலியோடும் அதிர்ந்தது.
“இத்தருணத்தை என் மனதில் ஒரு மில்லியன் முறையாவது கற்பனை செய்து பார்த்திருப்பேன். இவ்வெற்றிக்காகவே தினமும் காலையில் எழுந்தேன், உழைத்தேன்,” என மேடையில் நெகிழ்ந்தார் குகேஷ்.
தமது சாதனையையும் முறியடிக்கும் அடுத்த தலைமுறை உருவாகவேண்டும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
தம் பெற்றோர், கடுமையாக உழைத்த தமது அணி, பயிற்றுவிப்பாளர்கள், வேலம்மாள் பள்ளி, ரசிகர்கள் முதலியோருக்கு அவர் நன்றி உரித்தாக்கினார். அவரின் பெற்றோரும் உறவினர்களும் தமிழகத்திலிருந்து வருகை புரிந்திருந்தனர்.
மருத்துவரான குகேஷின் தந்தை டாக்டர் தொம்மராஜு, மேக்னஸ் கார்ல்சன்-விஸ்வநாதன் ஆனந்தின் உலகச் சதுரங்க விளையாட்டுப் போட்டியை நேரில் கண்டதே குகேஷின் இலட்சிய தொடக்கப்புள்ளியாக அமைந்ததை நினைவுகூர்ந்தார்.
“நிதி ரீதியாக பல தடங்கல்களைக் குடும்பமாக கடந்து குகேஷை கிராண்ட்மாஸ்டராக உருவாக்கியதன் பின்னர், இத்தகைய இமாலயச் சாதனை இவ்வளவு குறுகிய காலத்தில் நிகழும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் குகேஷூக்கும் அவரின் தாயாருக்கும் உறுதியான நம்பிக்கை இருந்தது,” என்றார் சதுரங்கத்தைவிட கிரிக்கெட்டிலேயே முன்னர் அதிக ஆர்வம் கொண்டிருந்ததாக கூறி நகைத்த டாக்டர் தொம்மராஜு.
நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு குகேஷைச் சிறப்பித்த சட்ட, போக்குவரத்து துணை அமைச்சர் முரளி பிள்ளை, இறுதிச்சுற்றில் பொருதிய குகேஷ், டிங் லிரன் இருவரையும் மெச்சினார்.
இரு வீரர்களும் இறுதி ஆட்டத்தைத் தொடர்ந்து வெளிப்படுத்திய போட்டியறப் பண்புகள், உலக அளவில் சதுரங்க ஆர்வலர்களுக்கு சீரிய முன்னுதாரணமாய் விளங்குவதாக அவர் கூறினார்.
மாலை 5 மணிக்கு ஏற்பாடாகி இருந்த ரசிகர் சந்திப்பிற்காக பிற்பகல் 2.30 மணியிலிருந்தே ரசிகர்கள் வரிசை கட்டி நிற்கத் தொடங்கினர்.
உலகச் சதுரங்க வெற்றியாளர் போட்டிகளை நடத்திய சிங்கப்பூரில் சதுரங்கத்துக்கான களம் இனி அகலும், வாய்ப்புகள் விரியும் என பலரும் நம்பிக்கை தெரிவித்தனர். அதற்கேற்ப, ஏற்பாட்டாளரும் சிங்கப்பூர் சதுரங்க ஒன்றியத்தின் தலைமை நிர்வாகியுமான கெவின் கோ, இப்போட்டி பல சிங்கப்பூரர்களையும் முக்கியமாக இளையர்களையும் ஈர்த்துள்ளதை குறிப்பிட்டார்.
குகேஷின் ரசிகர்களில் ஒருவரான மாணவர் ஏ.பெஞ்சமின், 14, கடைசி ஆட்டத்தில் கறுப்புக் காய்களைக் கொண்டு குகேஷ் வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கவே இல்லை என்றார். நேர நிர்வாகம், மன உளைச்சலைக் கையாள்வது முதலிய திறன்களே இறுதியில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கின்றன என்பதற்கு இதனை நல்ல சான்றாகக் கருதுவதாக அவர் தெரிவித்தார்.
முழுநேரமாக சதுரங்கத்தில் இறங்குவதில் முனைந்துள்ள தங்களின் மூன்று மகன்களுக்கு இவ்வெற்றி அளவுகடந்த உற்சாகம் ஊட்டியுள்ளதாக கூறினர் ஜெ.வெங்கட் – பெ.கவிதா தம்பதியர். கடைப்பிள்ளையான ஹரேஷ், 12, பள்ளியிலிருந்து ஆறு மாதகால விடுப்பு எடுத்துக்கொண்டு, 12 வயதுக்குட்பட்டோருக்கான சதுரங்க உலகக் கிண்ணப் போட்டிக்காகப் பயிற்சி எடுத்துக்கொண்டபோது, இருவரும் தயங்கவே செய்தனர்.
இவ்வாண்டு ஜூன் மாதத்தில் ஹரேஷ் தேசிய வெற்றியாளரானார். குகேஷின் வெற்றி அவரின் இலட்சியத்தை இன்னும் உறுதிப்படுத்தியுள்ளதை திரு வெங்கட் கவனித்தார்.
“சிங்கப்பூரில் சதுரங்கத்தை நீண்டநாள் தொடர்வதற்கு பள்ளிப் பளு, நேரமின்மை என தடைகள் பல. இந்நிலையில், குகேஷ் இந்தியச் சதுரங்க வீரராக வரலாறு படைத்தது அனைத்து பெற்றோருக்கும் இளையர்களுக்கும் கலங்கரை விளக்கமாய் திகழ்கிறது,” என கூறினார் பகுதிநேர கணக்காய்வாளர் கவிதா, 43.
உலகெங்கிலும் இருந்து குகேஷுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. ஹங்கேரிய-அமெரிக்க கிராண்ட்மாஸ்டரான சுசன் போல்கர், விஸ்வநாதன் ஆனந்த் இருவரும் குகேஷின் மனந்தளராமையைப் புகழ்ந்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குகேஷை ஊக்குவிக்கும் வண்ணம் ரூ.5 கோடி ரொக்கப்பரிசை அறிவித்துள்ளார். விஸ்வநாதன் ஆனந்தை தொடர்ந்து உலக அளவில் சதுரங்கத்தில் களமிறங்கி விருதுகளைக் குவித்துவரும் இளையர்களான குகேஷ், ர.பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகாசி முதலிய வீரர்கள் உலகத்தின் கவனத்தை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளனர்.