சர்வஜன வாக்கெடுப்பின்றி ’20’ நிறைவேறுவது நிச்சயம் பிரதமர் திட்டவட்டம்.

சர்வஜன வாக்கெடுப்பின்றி ’20’ நிறைவேறுவது நிச்சயம்
பிரதமர் மஹிந்த திட்டவட்டம்

“அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றியே தீருவோம்.”

– இவ்வாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

20ஆவது திருத்தச் சட்ட வரைவு குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர்களைத் தெளிவுபடுத்துகின்ற சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டைபாய ராஜபக்ச தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் பங்காளிகளாகச் செயற்பட்டு வருகின்ற அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ச மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசமைப்பின் 19ஆவது திருத்தச் சட்டத்தை நீக்கிவிட்டு 20ஆவது திருத்தச் சட்ட வரைவை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் காலங்களில் நாட்டு மக்களுக்கு நாம் வாக்குறுதியளித்துவிட்டோம். அதேவேளை, புதிய அரசமைப்பும் கொண்டுவரப்படும் என்றும் உறுதியளித்துவிட்டோம். எனவே, இந்த இரு வாக்குறுதிகளையும் நாம் மீறவே முடியாது. முதலில் அரசமைப்பின் 20ஆவது திருத்தத்தையும் அதன்பின்னர் புதிய அரசமைப்பையும் நாம் நிறைவேற்றியே தீர வேண்டும். அந்தக் கருமங்களிலிருந்து நாம் பின்னிற்கப்போவதில்லை.

20ஆவது திருத்தம் அவசியமற்றது என்ற மதத் தலைவர்களின் கோரிக்கையை நாம் கவனத்தில்கொள்கின்றோம். ஆனால், எமது ஜனாதிபதியையும் எமது அரசையும் நம்பி வாக்களித்த நாட்டு மக்களை நாம் ஏமாற்ற முடியாது.

20ஆவது திருத்தச் சட்ட வரைவு தொடர்பில் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள குழுநிலை விவாதத்தின்போதும்  திருத்தங்களை மேற்கொள்ள முடியும். இதன்போது உயர்நீதிமன்றத்தின் கட்டளையும் கவனத்தில்கொள்ளப்படும்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி நாம் எதனையும் செய்ய முடியாது. ஆனால், சர்வஜன வாக்கெடுப்புக்கு நாம் செல்லத் தேவையில்லை. அதைத் தவிர்க்கும் வகையில் சட்ட வரைவில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும்” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.