இந்திய ஊழியர்களை ராணுவ விமானத்தில் திருப்பி அனுப்பியது அமெரிக்கா!

அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருந்ததாகக் கூறப்படும் இந்திய ஊழியர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
இந்திய ஊழியர்களைக் கொண்ட அமெரிக்க ராணுவ விமானம் ஒன்று புறப்பட்டதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற ஊடகங்கள் தெரிவித்துள்ளன. டோனல்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற பிறகு அந்த ஊழியர்களே, இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்படும் முதல் இந்திய ஊழியர்கள் என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் திங்கட்கிழமையன்று (பிப்ரவரி 3) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
இந்திய ஊழியர்களைக் கொண்ட ஒரு சி-17 வகை ராணுவ விமானம் இந்தியாவுக்குப் புறப்பட்டதை அந்த அதிகாரி உறுதிப்படுத்தினார். 24 மணி நேரத்துக்குள் அவ்விமானம் இந்தியாவைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டிரம்ப்பின் அரசாங்கம், வெளிநாட்டு ஊழியர்களை அவர்களின் நாடுகளுக்குத் திருப்பியனுப்ப தங்களின் ராணுவத்தை அதிகம் ஈடுபடுத்தி வருகிறது. அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் கூடுதல் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டது, ஊழியர்களைக் கவனிக்க ராணுவ வசதிகள் பயன்படுத்தப்பட்டது, ஊழியர்களைச் சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப ராணுவ விமானங்களைப் பயன்படுத்துவது போன்றவை அதற்கு எடுத்துக்காட்டுகள்.
இதற்குமுன் குவாட்டமாலா, பெரு, ஹோண்டுராஸ் போன்ற நாடுகளுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் விமானங்களில் திருப்பி அனுப்பப்பட்டனர் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது.