கடந்த வருடத்தில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பில் 8,500 முறைப்பாடுகள்

கடந்த வருடத்தில் மாத்திரம் சுமார் 8,000 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இவற்றில் 235 முறைப்பாடுகள் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்றதாக, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்துள்ளார்.

“உங்களுக்குத் தெரியும், 1929 என்ற சிறுவர் தொலைபேசி சேவைக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 2019 ஆம் ஆண்டில் சுமார் 8,500 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகளைப் பெற்றுள்ளோம்.”

சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிரான சர்வதேச தினத்தையொட்டி கடந்த வாரம் வெளியிடப்பட்ட காணொளி அறிவிப்பில் தலைவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த வருடம் ஜூன் 12ஆம் திகதி வரை, சுமார் 3,500 சிறுவர் துஷ்பிரயோக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவற்றில் 87 முறைப்பாடுகள் சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பானது எனவும், பேராசிரியர் முதிதா விதானபதிரண தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றையடுத்து, நாட்டில் அமுல்படுத்தப்பட்ட தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் காரணமாக, சிறுவர் தொழிலாளர்கள் தொடர்பான முறைப்பாடுகளில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களை தொழிலாளியாகப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் தீர்மானத்திற்கு கடந்த 11ஆம் திகதி அமைச்சரவை அனுமதி அளித்திருந்தது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து முறைப்பாடுகளும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அதற்கான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் முதிதா விதானபதிரண தெரிவித்துள்ளார்.

சிறுவர்களின் சிறந்த நலன்களை உறுதி செய்வதற்காக அனைத்து நபர்களும் மற்றும் தரப்புகளும் பொறுப்பான முறையில் இணைந்து செயற்பட வேண்டுமென தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அழைப்பு விடுத்துள்ளது.

அனைத்து வகையான உடல், மன பாலியல் மற்றும் ஏனைய துஷ்பிரயோகங்களிலிருந்து சிறுவர்களை பாதுகாக்கும் செயற்பாட்டை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்டு வருகின்றது.

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அதிகாரங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் அல்லது அதற்கு இடையூறுவிளைவிக்கும் செயற்பாட்டை மேற்கொள்பவர்கள் குற்றவாளிகள் என்பதோடு, அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அதிகார சபையின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.