மனிதகுலத்திற்கு எதிரான கொலைகளை செய்த பிலிப்பீன்சின் முன்னாள் அதிபர் டுட்டர்டே கைது !

பிலிப்பீன்சின் முன்னாள் அதிபர் டுட்டர்டே கைது செய்யப்பட்டு அனைத்துலக நீதிமன்றம் செயல்படும் நெதர்லாந்தில் உள்ள ஹேக் நகரத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்.

மனிதகுலத்திற்கு எதிரான கொலைகளை செய்த குற்றங்களைச் சுமத்துவதற்காக அவர் மார்ச் 12ஆம் தேதி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

திரு டுட்டர்டே மேற்கொண்ட போதைப் பொருளுக்கு எதிரான நடவடிக்கையின்போது ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதில் ஒரு இணைக் குற்றவாளியாக அவர் மனிதகுலத்திற்கு எதிராக செயல்பட்டதை நம்புவதற்கான நியாயமான காரணங்கள் இருப்பதாக அனைத்துலக நீதிமன்றம் கூறியுள்ளது.

“நான்தான் சட்ட அமலாக்கம், ராணுவத்தை வழி நடத்தினேன். உங்களைப் பாதுகாப்பதாகக் கூறினேன். இவை எல்லாவற்றுக்கும் நான்தான் பொறுப்பு,” என்று தனக்கு நெருக்கமான ஆலோசகரின் ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துகொண்ட காணொளியில் திரு டுட்டர்டே தெரிவித்தார்.

நெதர்லாந்தில் தரையிறங்கும் சமயத்தில் இந்தக் காணொளியை அவர் பதிவிலிட்டிருந்தார்.

“காவல்துறை, ராணுவம் ஆகியவற்றிடம் ஏற்கெனவே தெரிவித்திருக்கிறேன். இது, என்னுடைய வேலை, இதற்கு நான்தான் பொறுப்பு,” என்று 79 வயது டுட்டர்டே மேலும் கூறினார்.

இவர்,அனைத்துலக நீதிமன்றத்தின் குற்றச்சாட்டை எதிர்நோக்கவிருக்கும் முதல் ஆசியத் தலைவர்.

போர்க் குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான கொலைகள், படுகொலைகள் உள்ளிட்ட மோசமான குற்றச்செயல்களுக்கு அனைத்துலக நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கி வருகிறது.

தனிப்பட்ட விமானத்தில் ரோட்டர்டாம் விமான நிலையத்தை அடைந்ததும் அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டதை பேச்சாளர் ஒருவர் உறுதி செய்தார்.

டுட்டர்டேவை ஒரு வாகனம் ஏற்றிக் கொண்டு அனைத்துலக நீதிமன்றத்தின் தடுப்புக் காவல் நிலையத்தை நோக்கிச் சென்றது. அப்போது வழியில் அவரது ஆதரவாளர்களில் சிலர் பிலிப்பீன்ஸ் நாட்டின் கொடியை ஏந்தி அவரைத் ‘திரும்பக் கொண்டு வாருங்கள்’ என்று முழக்கமிட்டனர்.

டுட்டர்டேயின் ஆட்சிக் காலத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்கான போர் தொடுக்கப்பட்டது. போதைப் பொருள் புழங்கிகள், கடத்தல்காரர்கள் ஆகியோரை உடனே சுட்டுக் கொல்லுமாறு அவர் உத்தரவிட்டிருந்தார். இதில் ஆயிரக்கணக்கானவர்கள் விசாரணையின்றி துரத்தி, துரத்தி சுட்டுக் கொல்லப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் அவர் மீது நடவடிக்கை எடுப்பதை வரவேற்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.