மத்தியப் பிரதேச அணையில் படகு கவிழ்ந்து 7 பேர் மாயம்!

மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்திலுள்ள அணையில் படகு கவிழ்ந்ததில் 4 குழந்தைகள் மற்றும் 3 பெண்கள் மாயமாகியுள்ளனர்.

மாட்டாடிலா அணைப்பகுதியிலுள்ள தீவில் அமைந்துள்ள சித்தா பாபா கோயிலுக்கு நேற்று (மார்ச் 18) மாலை 15 பேர் கொண்ட குழுவினர் படகு மூலம் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென படகு கவிழ்ந்து தண்ணீர் உள்ளே புகுந்ததில் அதில் பயணித்த 15 பேரும் நீரில் மூழ்கினர். உடனடியாக அங்குள்ள கிராமவாசிகள் தங்களது படகுகள் மூலம் உயிருக்கு போராடியவர்களில் 8 பேரை மீட்டனர்.

இருப்பினும், அந்த படகில் பயணித்தவர்களில் 35 முதல் 55 வயதுடைய 3 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் மாயமாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து, மாயமான 7 பேரை ஆழ்கடல் நீச்சல் வீரர்களின் உதவியுடன் தேடி வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, அணையின் மத்தியில் அமைந்துள்ள தீவுக்கு பயணம் செய்தபோது படகினுள் தண்ணீர் வருவதை பெண் பயணி ஒருவர்தான் முதலில் பார்த்ததாக நேரில் கண்ட சாட்சிகள் கூறியுள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.