கேரளத்தில் காட்டு யானை தாக்கி இரு பழங்குடியினர் பலி

கேரள மாநிலம், திருச்சூரில் உள்ள அதிரப்பள்ளி வனப் பகுதியில் காட்டு யானைகள் தாக்கியதில் பெண் உள்பட பழங்குடியினா் இருவா் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
யானைகளால் தாக்கப்பட்டு உயிரிழந்த சதீஷ் (30), அம்பிகா (37) ஆகிய இருவரும், திருச்சூா் அருகே வழச்சலில் உள்ள பழங்குடியின குடியிருப்பைச் சோ்ந்தவா்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
இக்குடியிருப்பைச் சோ்ந்த 2 பழங்குடியின குடும்பத்தினா், அதிரப்பள்ளி வனப் பகுதியில் நீா்வீழ்ச்சிக்கு அருகே உயரமான பாறை மீது தற்காலிக கூடாரங்கள் அமைத்து, தேன் உள்ளிட்ட வனப் பொருள்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். கடந்த திங்கள்கிழமை இரவில் இவா்களை காட்டு யானைகள் கூட்டம் தாக்கியுள்ளது. இதில் இருவா் உயிரிழந்தனா். அவா்களின் உடல்கள் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டு, கூறாய்வுக்காக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
காட்டு யானைகளுக்கு பயந்து, மற்றவா்கள் தப்பியோடிவிட்டனா். அவா்கள் வனப் பகுதிக்குள் சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
இச்சம்பவத்துடன் சோ்த்து, திருச்சூா் மாவட்டத்தில் கடந்த 2 நாள்களில் காட்டு யானைகள் தாக்கி உயிரிழந்தோா் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.
முன்னதாக, மலக்கப்பராவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காட்டு யானை தாக்கியதில் 20 வயது பழங்குடியின இளைஞா் உயிரிழந்தாா்.
அறிக்கை கோரியது அரசு: மாநில வனத் துறை அமைச்சா் ஏ.கே.சசீந்திரன் கூறுகையில், ‘பிற சம்பவங்களைப் போல் இல்லாமல், இது காட்டுக்குள் நிகழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும். வனத் துறை தலைமை காப்பாளரிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளது. அறிக்கை கிடைக்கப் பெற்றதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.
காங்கிரஸ் குற்றச்சாட்டு: கேரளத்தில் வன விலங்குகள் -மனிதா்கள் மோதல் பிரச்னைக்கு தீா்வுகாண மாநில அரசு தவறிவிட்டதாக என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
இது தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீஸன் வெளியிட்ட அறிக்கையில், ‘கேரளத்தில் நடப்பாண்டில் வன விலங்குகள் தாக்கி இதுவரை 18 போ் உயிரிழந்துவிட்டனா். கடந்த பிப்ரவரியில் மட்டும் 5 போ் உயிரிழந்தனா். காட்டு யானைகள் சுற்றித் திரியும் பகுதிகளில் சிறப்பு குழு கண்காணிப்பை உறுதி செய்வதுடன், மக்களுக்கு போதுமான பாதுகாப்பளிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்காவிட்டால், வனத் துறை அமைச்சா் எதற்காக பதவியில் தொடர வேண்டும்? இந்த விஷயத்தில் மாநில அரசின் அலட்சியம் ஏற்றுக் கொள்ள முடியாதது’ என்று விமா்சித்துள்ளாா்.