ஜே.வி.பிக்கு வாக்களித்து ஏமாந்த தமிழ் மக்கள் இம்முறை தமிழ்க் கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள் – இப்படி நம்பிக்கையுடன் சித்தார்த்தன் தெரிவிப்பு.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜே.வி.பிக்கு வாக்களித்து ஏமாந்து விட்டோம் என்ற ஆதங்கத்திலேயே தமிழ் மக்களும் தற்போது இருக்கின்றார்கள். அதனால் இம்முறை தேர்தலில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வாக்களித்து தமிழர்களையே தெரிவு செய்வார்கள் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.”

இவ்வாறு ஐனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் இணைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்குக் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அநுர ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை எமது மக்களுக்குக் கடந்த தேர்தலிலும் நாங்கள் கூறியிருந்தோம். அதாவது ஜே.வி.பி., அநுரகுமார, தேசிய மக்கள் சக்தி என்பது எல்லாம் யார் என்றும், இவர்கள் என்ன என்ன செய்வார்கள் என்றெல்லாம் கூறியிருந்தோம்.

அதிலும் அந்தத் தேர்தல் பிரச்சாரத்திற்காக அநுரகுமார எதனைக் கூறினாலும் அவர் எதனையும் நடைமுறைப்படுத்தமாட்டார் என்பதையும் அவ்வாறு நடைமுறைப்படுத்துவது கஷ்டம் என்றும் கூறியிருந்தோம்.

அதைப்போலவே அந்தத் தேர்தலில் வழங்கிய வாக்குறுதிகளை அவர் நிறைவேற்றவில்லை. ஏனெனில் இதுதான் நடக்கும் என்பது எங்களுக்கு முன்னரே தெரிந்து இருந்தது.

இதனைத்தான் நாங்கள் முன்னர் கூறியபோது கவனத்தில் எடுக்காத தமிழ் மக்கள் பலரும் அதனைத் தற்போது நேரடியாகவே தெரிந்துகொண்டுள்ளார்கள். இதனால் தாங்கள் மிகப் பெரிய ஒரு தவறைச் செய்துள்ளோம் என இப்போது அவர்கள் உணர்ந்துள்ளார்கள்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் தமிழ்க் கட்சிக்கு வாக்களிக்க வேண்டியது இன்றைய காலச் சூழலில் மிக அவசியம். ஆகையினால் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் அதனைச் செய்வார்கள் என நம்புகின்றோம்.

அதனால் பெரும்பான்மையான மக்கள் எமக்கு ஆதரவை வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம். அவ்வாறு ஆதரவை வழங்குவதன் ஊடாகவே எமது சபைகளை நாமே ஆள முடியும்.

இதனைவிடுத்து தமிழ் மக்கள் இங்கு சபைகளை அமைக்கத் தவறினால் மீண்டும் பெரும்பான்மையான ஆசனங்களைப் பெற்று ஆளும் கட்சியான ஜே.வி.பி. ஆட்சியமைக்கும் நிலைமை ஏற்பட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

இத்தகைய ஆபத்துக்களை உணர்ந்து முக்கியமான இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியத்திற்காகத் திரண்டு எமக்கு வாக்களிக்க வேண்டியது மிக மிக அவசியம்.

கடந்த தேர்தல் காலத்திலும் சரி இந்தத் தேர்தல் காலத்திலும் கூட தமிழ் மக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளை மட்டுமே ஜே.வி.பியினர் வழங்கி வருகின்றனர்.

உண்மையில் அன்று வாக்குறுதியளித்த எவையும் இதுவரை அநுர அரசால் நிறைவேற்றப்படவில்லை. இவ்வாறான நிலைமையில் தற்போது மேலும் பல வாக்குறுதிகளை அவர்கள் வழங்கி வருகின்றனர்.

ஆகவே, பொய்யான வாக்குறுதிகளை நம்பி ஏமாறாதீர்கள். கடந்த தேர்தலில் நம்பி வாக்களித்து ஏமாற்றமடைந்தது போன்று இனியும் நம்பி ஏமாற வேண்டாம்.

எனவே, ஒட்டுமொத்த தமிழ் மக்களும் தமிழ் மக்களின் உரிமைக்காகத் தமிழ்த் தேசியத்துடன் பயணிக்க வேண்டியது அவசியம். அதற்கமைய தமிழ்த் தேசியக் கொள்கையுடன் பயணிக்கும் எமது கூட்டணிக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் எனக் கேட்டுக்கொள்கிறோம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.