கனடா தேர்தலில் வெற்றி பெற்றுள்ள லிபரல் கட்சிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் வாழ்த்து – கனேடியத் தமிழர் பேரவை தெரிவிப்பு.

2025 கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த கனடா கூட்டாட்சி அரசை அமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ள லிபரல் கட்சிக்குக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட கனேடியத் தமிழ்ப் பிரதிநிதிகளுக்கும் கனேடியத் தமிழர் பேரவை தனது இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-
“மக்களால் வெளிப்படுத்தப்பட்ட நம்பிக்கையை மதித்து, நாட்டின் முன்னேற்றத்திற்குப் புதிய அரசு உறுதியுடன் செயற்படும் என நாம் நம்புகின்றோம்.
இந்தத் தேர்தலில் வெற்றி பெற்ற கனேடியத் தமிழ் உறுப்பினர்களுக்கும் கனேடியத் தமிழர் பேரவை பெருமிதத்துடன் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது.
கனேடியத் தமிழர் பேரவையின் முன்னாள் சட்ட ஆலோசகரான கரி ஆனந்தசங்கரி மீண்டும் தெரிவாகியுள்ளார். கனேடியத் தமிழர் பேரவையின் முன்னாள் துணைத் தலைவராக இருந்த ஜோனீட்டா நாதன் வரலாற்றுப் பெருமை வாய்ந்த முறையில் முதன்முறையாகப் பொதுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார். இதனுடன், அனீட்டா ஆனந்த்தும் மீண்டும் பொதுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளார். இந்த வெற்றிகள், கனேடியத் தமிழ்ச் சமுதாயத்தின் அரசியல் ஈடுபாடு மற்றும் பங்களிப்பைத் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன.
அரசியல் சார்பற்ற மற்றும் இலாப நோக்கமற்ற அமைப்பாகச் செயற்படும் கனேடியத் தமிழர் பேரவை, புதிய அரசுடன் இணைந்து, அனைத்து கனேடியர்களின் நலன்களையும் முன்னிலைப்படுத்தும் பணிகளிலும் செயற்படத் தயாராக இருக்கின்றது.
புதிய அரசு மக்கள் விருப்பங்களை மதித்து, ஒற்றுமை, சமத்துவம் மற்றும் வளர்ச்சியை முன்னேற்றும் நடவடிக்கைகளை எடுக்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
அதேபோல், நாடு எதிர்கொள்கின்ற பொருளாதார மற்றும் அரசியல் சவால்களைத் திறமையாகச் சமாளித்து, கனடாவின் உலகளாவிய நிலையை வலுப்படுத்தி, அனைத்து கனேடியர்களுக்கும் நீடித்த வளர்ச்சியை உறுதி செய்யும் நடவடிக்கைகளைப் புதிய அரசு எடுக்கும் என நாங்கள் நம்புகின்றோம்.
கனேடியத் தமிழர் பேரவை, புதிய அரசின் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் வலுப்படுத்தும் முயற்சிகளில் தொடர்ந்து உறுதியாகக் கைகோர்க்கும்.” – என்றுள்ளது.