முப்படை வீரர்களுக்கும், மோடி, அமித் ஷாவுக்கும் ரஜினிகாந்த் பாராட்டு.

பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலை நடத்தியது.
இதன் மூலம் பாகிஸ்தானில் உள்ள பல்வேறு தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டன.
இதனால் பாகிஸ்தான், இந்திய எல்லை பகுதிகளில் ட்ரோன் மற்றும் பீரங்கி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது.
இருப்பினும், இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு அமைப்பு அவற்றைச் சுட்டு வீழ்த்தியது.
தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வந்தது.
இந்நிலையில் நேற்று(மே 10) மாலை இரு நாடுகளுக்கிடையே தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் கூடி வந்திருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று(மே 11) விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த் முப்படை வீரர்களுக்கும், மோடி மற்றும் அமித் ஷாவிற்கு தனது பாராட்டைத் தெரிவித்திருக்கிறார்.
பாகிஸ்தான் நாட்டிற்குள் நுழைந்து அங்குள்ள தீவிரவாத முகாம்களை அழித்த இந்திய ராணுவத்திற்கு எனது மனமார்ந்தப் பாராட்டுகள்.
இந்தப் பிரச்னையை வலிமை மற்றும் வீரியத்துடன் கையாண்டு கொண்டிருக்கும் நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முப்படை வீரர்களுக்கும் எனது மனமார்ந்தப் பாராட்டுகள்” என்று வாழ்த்தி இருக்கிறார்.