உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது பற்றி உத்தியோகபூர்வமாக எந்தத் தரப்பும் பேசவில்லை – இப்படி டக்ளஸ் கூறுகின்றார்.

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பில் உத்தியோகபூர்வமாக எந்தவொரு தரப்பும் பேச்சுக்களை முன்னெடுக்கவில்லை என்று ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

“உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் எமது கட்சி ஊர்காவற்றுறை மற்றும் நெடுந்தீவு ஆகிய சபைகளில் முதன்மை நிலையில் உள்ளது. அதனை விடவும் ஏனைய சபைகளிலும் எமது கட்சி தீர்மானிக்கத்தக்க ஆசனங்களைக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில் நாம் எப்போதுமே நடைமுறைச் சாத்தியமான விடயங்களை ஏற்றுக்கொள்கின்ற, பேசுகின்ற, சிந்திக்கின்ற தரப்புக்களுடன் கைகோர்ப்பதற்குத் தயங்குவதில்லை.

அந்தவகையில் உள்ளூராட்சி சபைகளில் நாம் எம்முடன் இணைந்து பயணிக்கக் கூடிய தரப்புக்களுடன் கூட்டிணைந்து செயற்படுவதற்குத் தயாராகவே இருக்கின்றோம்.

எனினும், தேர்தல் நிறைவடைந்து இதுவரையில் எந்தவொரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாக எம்முடன் பேச்சுக்களை நடத்தவில்லை.

உத்தியோகப்பற்றற்ற பேச்சுக்களில் தமிழ்க் கட்சிகளும், தேசியக் கட்சியும் ஈடுபடுகின்றன. எனினும், எமது கட்சிக்குள் நாம் தொடர்ச்சியாக எமக்கு விடுக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம்.

உத்தியோகபூர்வமான அழைப்புக்கள் அல்லது கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றபோது இறுதி முடிவை அறிவிப்போம்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.