கூட்டமைப்பை மஹிந்த தடை செய்திருந்தால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கலாம் – இப்படிக் கூறுகின்றார் சரத் வீரசேகர.

“கனடாவில் பிரம்டன் நகரில் சிங்கௌசி பொதுப் பூங்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் தொடர்பில் இலங்கை அரசு கடும் அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மஹிந்த ராஜபக்ஷ தடை செய்திருந்தால் பல பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருக்கலாம்.”
இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான சரத் வீரசேகர தெரிவித்தார்.
கனடாவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
“கனடாவில் பிரம்டன் நகரில் சிங்கௌசி பொதுப் பூங்காவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் கடும் அதிருப்தியை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறான செயற்பாடுகள் இலங்கையில் இனங்களுக்கிடையில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
இவ்வாறான செயற்பாடுகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வரவேற்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் அரசியல் செயற்பாடுகளுக்காகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டது.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் அதனை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தடை செய்திருக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தடை செய்யாமல் அலட்சியப்படுத்தியது மஹிந்த ராஜபக்ஷ செய்த அரசியல் ரீதியான தவறாகும். யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்கள் கடந்த காலங்களை மறந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பினார்கள். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அரசியல் இலாபத்துக்காக அரசியல் அதிகாரப் பகிர்வு பற்றி பேசி தேவையில்லாத பிரச்சினைகளை ஏற்படுத்தி, இனங்களுக்கிடையில் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிரிவினைவாதத்தை மீண்டும் தோற்றுவிக்கும் செயற்பாடுகள் தற்போது இடம்பெறுவதை அவதானிக்க முடிகின்றது. அரசியல் பிரபல்யத்துக்காகத் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடைய விடயங்களை அலட்சியப்படுத்துவதை அரசு தவிர்த்துக்கொள்ள வேண்டும்.” – என்றார்.