ஐந்தரை மாதங்களில் மட்டும் வீதி விபத்துக்களால் 965 பேர் உயிரிழப்பு!

இலங்கையில் இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம் 14 ஆம் வரையான காலப்பகுதியில் மாத்திரம் வீதி விபத்துக்களின் காரணமாக சுமார் 965 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அந்தவகையில், நாடு தழுவிய ரீதியில் கடந்த ஜனவரி முதலாம் திகதி முதல் மே மாதம் 14 ஆம் வரையான காலப்பகுதியில் 1,842 பாரதூரமான சேதங்களை ஏற்படுத்தக் கூடிய வீதி விபத்துக்கள் பதிவாகியுள்ளதுடன் குறித்த விபத்துகளில் சிக்கி சுமார் 965 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர சிறியளவிலான சேதம் மற்றும் பாதிப்புகளுடன் கூடிய 902 வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளன என்று பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கவனக் குறைவாகவும் அதிக வேகத்துடனும் வாகனம் செலுத்துதல், மது போதையில் வாகனம் செலுத்துதல், உரிய காலப்பகுதியில் வாகனங்களைப் பழுது பார்க்காமை மற்றும் வாகனம் செலுத்தும்போது சாரதிகளுக்கு ஏற்படும் தூக்கக் கலக்கம் போன்ற காரணங்களால் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுகின்றன என்றும் பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.
ஆகையால் தூரப் பயணங்கள் செல்லும் சாரதிகள் முறையாக நித்திரை கொண்டு வாகனம் செலுத்துவதுடன் மேலதிக சாரதி ஒருவரையும் பயணத்தின்போது இணைத்துக் கொள்வதன் மூலம் விபத்துக்களைத் தவிர்க்கலாம் என்றும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.
“வெளியிடங்களுக்குச் சுற்றுலாவுக்காகச் செல்வோர் பழக்கமில்லாத புதிய வீதிகளில் வாகனம் செலுத்துவது அவதானம் மிக்கது. குறித்த வீதி பற்றிய அனுபவம் உடைய சாரதி ஒருவர் இருப்பதே நல்லது.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸாரால் விசேட நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளதுடன், மேற்படி திட்டத்துக்கமைய சாரதிகளிடையே விபத்துக்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.” – என்றும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.