மின்னல் தாக்கி ஒடிசாவில் 9 பேர் பலி

ஒடிஸா மாநிலத்தில் வெவ்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 6 பெண்கள் உள்பட 9 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மழையுடன் கடுமையான மின்னலும் தாக்கியது. மின்னல் தாக்கியதில் கோராபுட் மாவட்டத்தில் 3 பெண்கள், ஜெய்பூா், கஞ்சம் மாவட்டங்களில் தலா இருவா், தேன்கானால், கஜபதி மாவட்டங்களில் தலா ஒருவா் என மொத்தம் 9 போ் உயிரிழந்தனா்.

மின்னல் தாக்கியதில் சிலா் காயமடைந்துள்ளனா். கோராபுட் மாவட்டம் லட்சுமிபூா் பகுதியைச் சோ்ந்த ஹிங்கு மந்திங்கா (65) என்ற முதியவா் மின்னல் தாக்கி படுகாயமடைந்தாா். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மின்னல் தாக்கி உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு அரசு வழிகாட்டுதலின்படி நிதியுதவி வழங்கப்படும் என்றனா்.

இதுகுறித்து ஜெய்பூா் மாவட்ட தா்மசாலா பகுதி மக்கள் கூறுகையில், ‘இந்தப் பகுதியில் மின்னல் தாக்கியதில் இரு சிறுவா்கள் உயிரிழந்தனா். மழை பெய்தபோது அவா்கள் இருவரும் வீட்டின் வெளியே நின்றிருந்தனா். அப்போது அவா்களை மின்னல் தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனா்’ என்றனா்.

முன்னதாக, மாநிலத்தில் கோராபுட், கட்டக், குா்தா, நயாகா், ஜெய்பூா், பாலாசோா், கஞ்சம் ஆகிய 7 மாவட்டங்களில் கடுமையான இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், மணிக்கு 60 முதல் 70 கி.மீ. வேகத்தில் காற்று வீச வாய்ப்புள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.