ஒலிம்பிக்கை ஏன் ரத்து செய்யக்கூடாது? ஏன் முடியாது?

பல விளையாட்டுத் தொடர்களும் தடைபட்டிருக்கின்றன; தள்ளிவைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதையும் இந்த விஷயம் ஒரே போல் எடுத்துக்கொள்ள முடியாது.

1940 : டோக்கியோவில் நடைபெறவிருந்த ஒலிம்பிக் தொடர், இரண்டாம் உலகப்போரின் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
1980 : சோவியத் – ஆப்கன் யுத்தத்தைக் காரணம் காட்டி அமெரிக்கா தனிக்கொடி பிடிக்க, 66 நாடுகள் மாஸ்கோ ஒலிம்பிக்கைப் புறக்கணித்தன.

2020 : உலகைப் புரட்டிப்போட்டிருக்கும் கொரோனா வைரஸால் டோக்கியோ ஒலிம்பிக் தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.
40 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒவ்வொரு ஒலிம்பிக் தொடரும் சிக்கல்களைச் சந்தித்துக்கொண்டிருப்பதைச் சுட்டிக்காட்டி, “இது ஒலிம்பிக்குக்கான சாபக்கேடு” என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் ஜப்பானியர்கள். 7 ஆண்டுகள் இந்த மாபெரும் தொடருக்காகக் காத்துக்கொண்டிருந்தவர்களுக்கு இது கடினமான செய்திதான்.

பல விளையாட்டுத் தொடர்களும் தடைபட்டிருக்கின்றன; தள்ளிவைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், அதையும் இந்த விஷயம் ஒரே போல் எடுத்துக்கொள்ள முடியாது. ஐ.பி.எல், பிரெஞ்சு ஓப்பன், ஃபார்முலா 1 போன்ற போட்டிகளுக்கும் ஒலிம்பிக்குக்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடப்பதால் மட்டுமல்ல, அதற்குப் பின்னால் இருக்கும் பல ஆண்டு உழைப்பு, முதலீடு எனப் பல விஷயங்கள் ஒலிம்பிக்கை மிகமுக்கியமானதாக்குகின்றன.

ஜூலையில் தொடங்கவிருந்த ஒலிம்பிக் தொடருக்கு ஜப்பான் சுமார் 7 ஆண்டுகளாகத் தயாராகிக்கொண்டிருக்கிறது. இந்த ஒலிம்பிக்கை நடத்தும் உரிமத்தை 2013-ம் ஆண்டு பெற்றது. ஆனால், 2012-ம் ஆண்டே (ஒலிம்பிக்கை நடத்த விண்ணப்பித்த பிறகு) ஒலிம்பிக்கைக் கருத்தில் கொண்டு (ரக்பி உலகக் கோப்பையையும்) டோக்கியோவின் நேஷனல் ஸ்டேடியத்தை மாற்றிக் கட்டமைக்கத் தொடங்கியது. அதையும் சேர்த்தால் இது 8 ஆண்டு உழைப்பு!

இந்த 8 ஆண்டுகளில் சுமார் 10 லட்சத்துக்கும் மேலானவர்கள் இந்த ஒலிம்பிக்கிற்காக உழைத்துள்ளனர். சுமார் 12.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 95,000 கோடி ரூபாய்) செலவு செய்துள்ளது ஜப்பான். அதில் கட்டுமானப் பணிகளுக்காக மட்டும் சுமார் 6 பில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது. ஒருவகையில் ஜப்பான் செலவு செய்திருக்கும் தொகை இதற்கு முந்தைய ஒலிம்பிக்கை நடத்திய நாடுகள் செலவு செய்ததைவிடக் குறைவுதான். ரியோ ஒலிம்பிக்குக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்களும், லண்டன் தொடருக்கு 18 பில்லியன் அமெரிக்க டாலர்களும் செலவு செய்யப்பட்டன. பீஜிங் ஒலிம்பிக்கிற்கு உச்சக்கட்டமாக 42 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் 3.2 லட்சம் கோடி ரூபாய்) செலவு செய்யப்பட்டது.

எதற்காக இவ்வளவு செலவு. இந்தச் செலவுகளால் என்ன பிரயோஜனம்? பொதுவாக ஒலிம்பிக் நடத்த செலவு செய்யப்படும் தொகையில் பெரும் பங்கு கட்டுமானச் செலவுகளுக்குத்தான் ஒதுக்கப்படுகிறது. மைதானங்களைப் புதுப்பித்தல், புதிய மைதானங்கள் கட்டுவதைத்தாண்டி, விமான நிலையம், ரயில் நிலையங்களைப் புதுப்பித்தல், புதிய சாலைகள் அமைப்பது, புதிய கட்டடங்கள் கட்டுவது என நகரின் உள்கட்டமைப்பிற்காகத்தான் பெரும் பகுதி செலவு செய்யப்படுகிறது. 2008 ஒலிம்பிக்கின்போது, பீஜிங்கை தூய்மைப்படுத்தவும், அழகாக்கவும் மட்டுமே (கட்டுமானப் பணிகள் இல்லாமல்) சுமார் 1 லட்சம் கோடிக்கு மேல் செலவு செய்துள்ளாகத் தெரிகிறது!

இந்த முதலீடுகளால் மிகப்பெரிய லாபம் வந்துவிடப்போவதில்லை. போட்டிக்கு ஆறு மாதம் முன்பும் பிறகும், அங்கு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், தனியார் நிறுவனங்களின் முதலீடுகள் அதிகரிக்கும், புதிய கட்டுமானங்களால் ஓரளவு லாபம் வரும். அவ்வளவே. இருந்தாலும் எதற்காக இவ்வளவு செலவு செய்து இந்தத் தொடரை நடத்த சில நாடுகள் இப்படிப் போட்டியிடுகின்றன!

ஒலிம்பிக் – இரண்டு வாரங்கள்தான் நடக்கும். ஆனால், அந்தச் சில நாள்களில் மொத்த உலகமும்… ஒட்டுமொத்த உலகமும் அந்த ஒரு நகரைத்தான் கவனித்துக்கொண்டிருக்கும். முதலீடு, லாபம் அனைத்தையும் தாண்டி ஒலிம்பிக் நடத்துவது பெருமை. சிறப்பாக நடத்துவது மிகப்பெரிய கௌரவம். ஒவ்வொரு நாடும் தங்களின் பெருமையை ஒலிம்பிக் மூலம் மீண்டும் பறைசாற்றவே நினைக்கும்.

2008 ஒலிம்பிக் தொடரை வெகு விமரிசையாக நடத்தியது பீஜிங். அதுவரை யாரும் நடத்திடாத, இனியும் யாரும் நடத்திட முடியாத வகையில் பிரமாண்டமாக அந்த ஒலிம்பிக்கை நடத்தினார்கள். வல்லரசு நாடுகள் வரிசையில் நாங்களும் இருக்கிறோம் என்ற அறைகூவல்தான் அந்தத் தொடர். அடுத்து அதை நடத்திய லண்டனுக்கு அனைவரும் பீஜிங்கை பெஞ்ச்மார்க்காக வைத்தார்கள். தொடக்கவிழா மீது அதிக எதிர்பார்ப்புகள் இருந்தது. ஆனால், லண்டன் எந்த வகையிலும் பீஜிங்கோடு போட்டியிடவில்லை. போட்டியிட நினைக்கவுமில்லை. அவர்களின் வரலாற்றை படம்பிடித்துக்காட்டினார்கள். தொழிற்புரட்சியில் தொடங்கி, தங்களின் ஒவ்வொரு பெருமையையும் பேசினார்கள். இதுதான் ஒலிம்பிக். ஒரு நகரின், ஒரு தேசத்தின் பெருமைகளை அரங்கேற்றுவதற்கான மிகப்பெரிய மேடை!

மாட்ரிட்டை உரசிப் பார்க்க 1992 ஒலிம்பிக்கை தங்கள் ஸ்டைலில் மிகப் பிரமாண்டமாக பார்சிலோனா நடத்தியதென்றால், உலகின் கவனத்தைப் பெற ஒலிம்பிக்குக்கு முன்னர் அந்த நகரத்தைத் தாக்கியது ETA என்ற தீவிரவாத அமைப்பு. ஒலிம்பிக் – லைம்லைட்டில் இருப்பதற்கான மிகப்பெரிய வாய்ப்பு. இதனால் ஏற்படும் நேரடி வருவாய் குறைவு என்றாலும், அந்நகருக்கு வரும் புதிய நிறுவனங்கள், ஸ்பான்சர்கள் என மறைமுகப் பலன்கள் அதிகம். அதற்கு அந்த லைம்லைட் அவசியம்.

இப்படி 7 ஆண்டுகள் இந்த ஒலிம்பிக் மீது கொட்டியிருக்கும் முதலீடு பலன் கொடுக்கும் நேரத்தில் இப்படியொரு தடங்களை ஜப்பான் எதிர்பார்த்திருக்காது. யாருமே எதிர்பார்த்திருக்க முடியாது. அதுவும் தொழில்நுட்ப உலகில் மிகப்பெரிய சக்தியாக விளங்கிகொண்டிருக்கும் இந்த நேரத்தில், ஜப்பான் தங்களின் எழுச்சியை, பெருமையை உலகுக்குப் பறைசாற்ற இன்னும் ஒரு வருடம் காத்திருக்கவேண்டியிருக்கிறது.

அதேபோல், “ஒலிம்பிக்கை முழுமையாக ரத்து செய்துவிடலாமே” என்ற வாதமும் ஒருபக்கம் எழுந்துகொண்டிருக்கிறது. அது சாதாரண விஷயமல்ல. ஜப்பான் செய்திருக்கும் பல்லாயிரம் கோடி முதலீடுகளைத்தாண்டி ஒளிபரப்பு உரிமத்துக்காக பல நிறுவனங்கள் ஒப்பந்தங்கள் செய்திருக்கின்றன. 2018 முதல் 2024 வரை நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளின் ஐரோப்பிய ஒளிபரப்பு உரிமத்தை மட்டும் சுமார் பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருக்கிறது டிஸ்கவரி! 2020, 2024 ஒலிம்பிக் தொடர்கள், 2018, 2022 குளிர்கால ஒலிம்பிக் தொடர்கள் என 4 தொடர்களுக்கு இந்தத் தொகை. இது ஐரோப்பாவுக்கு மட்டும்! (இங்கிலாந்து தனி) இப்படியிருக்கையில், ஒரு தொடரே நடக்காமல் போனால், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி மாபெரும் இழப்பைச் சந்திக்க நேரிடும். அதனால், அவர்கள் அந்த முடிவை எடுப்பது என்பது அவ்வளவு எளிதல்ல!

Comments are closed.