பெங்களூரு அணி 42 ரன் வித்தியாசத்தில் தோல்வி!

லக்னோவில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் பெங்களூரு, ஐதராபாத் அணிகள் மோதின. பெங்களூரு அணியின் ‘ரெகுலர்’ கேப்டன் ரஜத் படிதர், ‘இம்பாக்ட்’ வீரராக இடம் பெற்றார். பெங்களூரு அணியை வழிநடத்திய ஜிதேஷ் சர்மா, ‘டாஸ்’ வென்று ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.

ஐதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா (34), டிராவிஸ் ஹெட் (17) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. அடுத்து வந்த இஷான் கிஷான், சுயாஷ் சர்மா வீசிய 9வது ஓவரில் வரிசையாக 2 பவுண்டரி விரட்டினார். கிளாசன் (24), அனிகேத் வர்மா (26) ஓரளவு கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய இஷான் கிஷான், 28 பந்தில் அரைசதம் எட்டினார். நிதிஷ் குமார் ரெட்டி (4), அபினவ் மனோகர் (12) ஏமாற்றினர்.

ஏற்கனவே ‘பிளே-ஆப்’ வாய்ப்பை இழந்த ஐதராபாத் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 231 ரன் எடுத்தது. இஷான் (94* ரன், 5 சிக்சர், 7 பவுண்டரி), கேப்டன் கம்மின்ஸ் (13) அவுட்டாகாமல் இருந்தனர்.

‘பிளே-ஆப்’ சுற்றுக்குள் நுழைந்த உற்சாகத்தில் இருந்த பெங்களூரு அணிக்கு பில் சால்ட், விராத் கோலி ஜோடி சூப்பர் துவக்கம் தந்தது. முதல் விக்கெட்டுக்கு 80 ரன் சேர்த்த போது ஹர்ஷ் துபே பந்தில் கோலி (43) அவுட்டானார். ஹர்ஷல் படேல், ஹர்ஷ் துபே பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்ட சால்ட், எஷான் மலிங்கா பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். மயங்க் அகர்வால் (11) சோபிக்கவில்லை. கம்மின்ஸ் ‘வேகத்தில்’ சால்ட் (62 ரன், 5 சிக்சர்) வெளியேறினார்.

ரஜத் படிதர் (18), ஜிதேஷ் சர்மா (24) நிலைக்கவில்லை. ஷெப்பர்டு (0), டிம் டேவிட் (1), புவனேஷ்வர் (3), குர்ணால் பாண்ட்யா (8) யாஷ் தயாள் (3) ஏமாற்றினர். பெங்களூரு அணி 19.5 ஓவரில் 189 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’டாகி தோல்வியடைந்தது.

Leave A Reply

Your email address will not be published.