‘ஏஸ்’ திரைப்பட விமர்சனம் .

இயக்குநர் ஆறுமுக குமார் இயக்கி தயாரித்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ஏஸ் திரைப்படம் இன்று திரையரங்கில் வெளிவந்துள்ளது.

இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, பப்லு, கேஜிஎப் அவினாஷ், திவ்யா பிள்ளை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வாங்க திரைப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம்.

தனது பழைய அடையாளத்தை மறைத்துக்கொண்டு மலேசியா வரும் விஜய் சேதுபதிக்கு யோகி பாபுவின் அறிமுகம் கிடைக்கிறது. அவர் மூலம் கல்பனா என்பவரின் ஹோட்டலில் விஜய் சேதுபதிக்கு வேலை கிடைக்க மறுபக்கம், கதாநாயகி ருக்மிணியுடன் சந்திப்பு ஏற்படுகிறது.

முதலில் மோதலில் தொடங்கும் அவர்களுடைய அறிமுகம் பின் காதலாக மாறுகிறது. இருவரும் நன்றாக பழகி வரும் நிலையில், ருக்மிணி தனது Step Father-இடம் இருந்து தனது வீட்டை மீட்டேடுக்க போராடி வருவதை தெரிந்து கொள்கிறார் விஜய் சேதுபதி. இதற்காக பல லட்சங்கள் தேவைப்படுகிறது.

இந்த சமயத்தில் வில்லன் அவினாஷுடன் விஜய் சேதுபதி சூதாட்டம் ஆடுகிறார். தொடர்ந்து விஜய் சேதுபதி மட்டுமே வெற்றி பெறுகிறார். இதனால் அவரை தோற்கடிக்க சூதாட்டத்தில் ஏமாற்றி வெற்றி பெறுகிறார். இதனால் வில்லனிடம் விஜய் சேதுபதியை கடனாளி ஆக்குகிறார்.

இந்த கடனை ஒரு வாரத்திற்குள் திருப்பி தரவில்லை என்றால் கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார். தனக்கும், தன்னை சுற்றி உள்ளவர்களுக்கு பண தேவை மிகப்பெரிய அளவில் உள்ள காரணத்தினால், கொள்ளையடி முடிவு செய்து சுமார் ரூ. 40 கோடி பணத்தை வங்கிக்கு செல்லும் வேனில் இருந்து திருடுகிறார்.

அதன்பின் என்ன நடந்தது? அவர்களுடைய பிரச்சனை அனைத்தும் தீர்ந்ததா? இல்லையா? இவ்வளவு பெரிய விஷயங்களை செய்யும் விஜய் சேதுபதி யார்? என்பதே படத்தின் மீதி கதை.

கதாநாயகன் விஜய் சேதுபதி வழக்கம் போல் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துவிட்டார். அதில் எந்த ஒரு குறையும் வைக்கவில்லை. ஆனால், அவருடைய கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம் சுவாரஸ்யமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

கதாநாயகி ருக்மிணி கன்னடத்தில் Sapta Saagaradaache Ello படத்தின் மூலம் இளைஞர்களின் மனதில் இடம் பிடித்தார். அதே போல் இப்படத்திலும் தனது அழகிய நடிப்பை சிறப்பாக செய்துள்ளார்.

யோகி பாபுவின் நகைச்சுவை பல இடங்களில் ஒர்க்கவுட் ஆகவில்லை. அதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாக அமைந்துள்ளது. மேலும் திவ்யா பிள்ளை, பப்லு, அவினாஷ் ஆகியோர் நடிப்பு நன்றாக இருந்தது.

இயக்குநர் ஆறுமுககுமார் கதைக்களத்தை உருவாக்கிய விதம் நன்றாக இருந்தாலும், திரைக்கதையில் அதை சுவாரஸ்யமாகவும், ரசிக்கும்படியும் அவர் வழங்கவில்லை. குறிப்பாக முதல் பாதி திரைக்கதையில் பல இடங்களில் தொய்வு. அதே போல் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு இன்னும் வலுவாக இருந்திருக்கலாம்.

ஆனால், இரண்டாம் பாதியில் வரும் ஆக்ஷன் காட்சிகளும், ப்ரீ கிளைமாக்ஸ் மற்றும் கிளைமாக்ஸ் காட்சி சிறப்பாக இருந்தது. அதற்கு பாராட்டுக்கள். மேலும் காதல் காட்சிகள் அழகாக காட்டியிருந்தனர். அதற்கு ஒளிப்பதிவாளர் கரணுக்கு பாராட்டு. பதற்றமான சூழலில் விஜய் சேதுபதியிடம் ருக்மிணி தனது காதலை வெளிப்படுத்தும் காட்சியும் நன்றாக இருந்தது.

ஜஸ்டின் பிரபாகரனின் உருகுது உருகுது பாடல் ரசிக்கும்படி இருந்தாலும், மற்ற பாடல்கள் யாவும் மனதில் நிற்கவில்லை. சாம். சி.எஸ் பின்னணி இசை ஆக்ஷன் காட்சிகளில் மிரட்டலாக இருந்தது. எடிட்டிங் படத்தை பல இடங்களில் காப்பாற்றியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.