தங்க முலாம் பூசப்பட்ட ரி – 56 துப்பாக்கி விவகாரம்: முன்னாள் அமைச்சர் துமிந்த மே 29 வரை விளக்கமறியலில்…

கொழும்பு, வெள்ளவத்தையில் தங்கமுலாம் பூசப்பட்ட ரி – 56 ரக துப்பாக்கி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதிவான் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.

பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டு வளாகத்தில் தங்கியிருந்தபோது, முன்னாள் அமைச்சர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை, கொழும்பில் உள்ள வீட்டு வளாகத்தில் வசிக்கும் ஒரு பெண்ணிடம் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட ரி – 56 துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டது.

அதன்படி, வெள்ளவத்தை பொலிஸார் 69 வயதான அந்தப் பெண்ணையும், அவரது மருமகளையும் கைது செய்து நீண்ட நேரம் விசாரித்தனர்.

அவர்கள், சம்பந்தப்பட்ட துப்பாக்கி பற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பொலிஸாரிடம் கூறினர்.

பின்னர் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

இருப்பினும், துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தத் தொடங்கிய பொலிஸார், அது தொடர்பான பல முக்கியமான உண்மைகளைக் கண்டுபிடித்தனர்.

இதன்போதே முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க இந்தத் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கியுடன் நேரடி தொடர்பு வைத்திருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

இந்தநிலையில் சந்தேகநபரான முன்னாள் அமைச்சர், ஆறு மாதங்களுக்கு முன்பு தனது சமையல்காரர் மூலம் தனது நண்பரான பெண் ஒருவரின் வீட்டுக்கு இந்தத் துப்பாக்கியை அனுப்பியுள்ளார் என்பதைப் பொலிஸார் கண்டுபிடித்தனர்.

ஆயுதம் அடங்கிய பையில் ரி – 56 துப்பாக்கி இருப்பதை அறியாமலேயே அவர் அதை ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பந்தப்பட்ட விசாரணைகளில், இந்த ரி – 56 துப்பாக்கி, பாகங்களை ஒன்று சேர்த்து தயாரிக்கப்பட்ட ஆயுதம் என்பது தெரியவந்தது.

இதற்கிடையில், குறித்த துப்பாக்கி தொடர்பான வழக்கு நேற்று கல்கிஸை நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, இரண்டு பெண் சந்தேகநபர்களையும் ஜூன் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் தரங்க டி சில்வா உத்தரவிட்டார்.

அத்துடன் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கு, சிறையில் உள்ள இரண்டு சந்தேகநபர்களிடம் இருந்து மேலும் எழுத்து மூலமான வாக்கு மூலங்களைப் பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட துமிந்த திஸாநாயக்கவின் சமையல்காரரும் ஜூன் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

துமிந்த திஸாநாயக்க இன்றைய கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.