வவுனியாவில் 18 மணித்தியாலங்களுக்கு மேலாக நீர் விநியோகம் தடை: மாநகர சபை உறுப்பினரின் முன்மாதிரியான செயற்பாடு.
வவுனியா மாநகர சபை உறுப்பினர் ஒருவர் 18 மணித்தியாலங்களுக்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டிருந்த பகுதிகளில் தனது சொந்த நிதியில் வாகனத்தைக் கூலிக்கு அமர்த்தி நீர் விநியோகம் மேற்கொண்ட சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
வவுனியா மாநகர சபையின் பண்டாரிக்குள வட்டார உறுப்பினரான சி.பிறேமதாஸ் (கடவுள்) என்பவராலேயே இந்த வேலைத்திட்டம் இன்று மேற்கொளளப்பட்டது.
வவுனியா நகரின் சில பகுதிகள், மன்னார் வீதி, குருமன்காடு, நகரசபை விடுதி, அரச விடுதிப் பகுதி உளளிட்ட சில பகுதிகளில் நேற்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பால் வழங்கப்படும் நீர் விநியோகத்தில் தடை ஏற்பட்டு சுமார் 18 மணித்தியாலங்களுக்கு மேலாக நீர் விநியோகம் தடைப்பட்டிருந்தது. இதனால் வர்த்தக நிலையங்கள், உணவகங்கள், அரச விடுதிகள், வீடுகள் என்பவற்றில் தமது அன்றாடச் செயற்பாடுகளுக்கு நீரைப் பெற்றுக்கொள்ள முடியாமல் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதுடன், வேறு இடங்களுக்குச் சென்று கலன்களில் நீரை எடுத்து வருவதையும் அவதானிக்க முடிந்தது.
இந்நிலையில், வவுனியா மாநககர சபை உறுப்பினர் சி.பிறேமதாஸ் நீர்த்தாங்கி வாகனம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி அதன் மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களது வீடுகளுக்குச் சென்று அவர்களுக்குத் தானே நீரை எடுத்துக் கொடுத்து மக்களது அவசர நீர்த்தேவையைப் பூர்த்தி செய்துள்ளார். இவரது முன்மாதிரியான செயற்பாடு மக்களது பாராட்டைப் பெற்றுள்ளது.
தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நீர் விநியோகக் குழாயில் வெடிப்பு ஏற்பட்டது எனவும், குறித்த வெடிப்பு ரயில் தண்டவாளத்துக்குக் கீழ் உள்ள குழாயில் ஏற்பட்டுள்ளதால் ரயில் திணைக்கள அதிகாரிகள் வருகை தந்த பின்னரே அதனைச் சீர்செய்ய முடியும் என்பதாலேயே தாமத நிலை ஏற்பட்டது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.





