சி.வி.கேயும் செம்மணியில் அகௌரவப்படுத்தப்பட்டார் வருத்தம் தெரிவித்தார் சிறீதரன் எம்.பி.
கடந்த மூன்று தினங்களாக செம்மணியில் நடைபெறும் ‘அணையா விளக்கு’ போராட்டத்துக்குத் தொடர்ந்து வருகை தந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் இன்று பகல் போராட்டத்தில் பங்குபற்றி விட்டு வெளியேறும் சமயம் ஒரு கும்பலினால் மோசமாகத் தூசித்து அகௌரவப்படுத்தப்பட்டார்.
கிளிநொச்சி அரசியல்வாதி ஒருவரின் அல்லக்கையாகச் செயற்படும் ஜீவராஜா (வட்டி ஜீவன்) என்பவரே முன்னின்று இந்த மோசமான செயலை முன்னெடுத்தார். அவரோடு வேறு ஒரு கும்பலும் சேர்ந்து கொண்டது.

தமிழரசுக் கட்சியின் தீர்மானங்களுக்கு எதிராக ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் செயற்பட்டமைக்காகவும், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு எதிராகப் போட்டியிட்டமைக்காகவும், கட்சியில் இருந்து ஜீவராஜா வெளியேற்றப்பட்டிருந்தார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தலின் போதும் கிளிநொச்சியில் தமிழரசுக் கட்சிக்கு எதிராக அவர் வேட்புமனுத் தாக்கல் செய்த போதிலும் அந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டமையால் அவர் அந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை.

தமிழரசுக் கட்சி அவரைக் கட்சியை விட்டு நீக்கிய போதிலும், கட்சியின் மாவட்டக் கிளையைச் சார்ந்தோர் அவரை அரவணைத்து தங்கள் வேலைகளுக்காகப் பயனடுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழரசுக் கட்சி தலைமையிலான கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை தலைவரும், ஏனைய உறுப்பினர்களும் அண்மையில் வடக்கு ஆளுநரை சந்தித்தபோது அந்த அணியில் இதே வட்டி ஜீவனுக்கு முக்கிய முன்னணி இடம் வழங்கப்பட்டிருந்தமை தெரிந்ததே.

அந்த வட்டி ஜீவன் மூலமே இன்று தமிழரசுக் கட்சியின் தலைவரை அகௌரவப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
செம்மணியில் இருந்து வெளியேறிய சி.வி.கே.சிவஞானமும், தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. சாணக்கியன் இராசமாணிக்கமும் பின்னர் மயிலிட்டியில் காணி விடுவிப்பை வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் பங்குபற்றிய சமயம் அங்கு வந்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்டத் தலைவரும் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி.சிறீதரன் செம்மணியில் சி.வி.கே.சிவஞானத்துக்கு இடம்பெற்ற மோசமான அனுபவத்துக்காக வருத்தம் தெரிவித்தார். அதில் கிளிநொச்சி ஆள்கள் சில பேர் சம்பந்தப்பட்டமைக்காக தமது கவலையையும் அவர் கோரினார் என அறியவந்தது.
தேர்தலுக்கும் மற்றைய விடயங்களுக்கும் கிளிநொச்சி அரசியல் பிரமுகர்கள் பினாமியாக பயன்படுத்தும் வட்டி ஜீவன் செம்மணியிலும் அந்த வேலையைச் செய்துகொள்ளப் பயன்படுத்தப்பட்டார் என்ற சீற்றம் தமிழரசுக் கட்சி மட்டத்தில் நிலவுவதை அறியமுடிந்தது.
