யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் தேவையற்ற விடயங்கள் பேசப்பட்டதே அதிகம் – அமைச்சர் சந்திரசேகர் கவலை.
யாழ்ப்பாணம் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அதன் தலைவர் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைலையில் இணைத் தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனின் பங்கேற்புடன் இன்று வியாழக்கிழமை யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலாகவே இந்தக் கூட்டம் இடம்பெற்றது.

இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் , கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அர்ச்சுனா இராமநாதன், எஸ்.ஸ்ரீபவானந்தராசா, ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், க.இளங்குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அத்துடன் திணைக்களத் தலைவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களும் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் வீதி அவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு, போக்குவரத்து, மின்சாரம், வீடமைப்பு, சட்டம் ஒழுங்கு, கடற்றொழில், விவசாயம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டன.

அதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பல்வேறு விடயங்களுக்கு நக்கல், நையாண்டி கலந்து பதிலளித்துக் கொண்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

அதையடுத்துக் கூட்ட முடிவின் போது, “யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அபிவிருத்தி தொடர்பான விடயங்கள் பேசப்பட்டமை குறைவு. தேவையற்ற விடயங்கள் பேசப்பட்டதே அதிகம். இப்படியான கூட்டம் இதுவே கடைசியாக இருக்க வேண்டும்.” – என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
