பெண்ணொருவரின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர் பொலிஸில் சரண். 1
கண்டி, நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய தோட்டத்தில் உள்ள பாழடைந்த பங்களாவுக்குள் பெண் ஒருவரின் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்த நபர், கம்பளை பொலிஸில் நேற்று சரணடைந்த நிலையில், மேலதிக விசாரணைக்காக நாவலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
நாவலப்பிட்டி, இம்புல்பிட்டிய தோட்டத்தைச் சேர்ந்த 39 வயதான மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட பெண், சந்தேகநபருடன் கம்பளை, புசல்லாவை பகுதியில் 9 மாதங்களாக வசித்து வந்துள்ளார் எனவும், நேற்று தனது சட்டபூர்வ கணவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார் எனவும், அங்கிருந்து மேற்படி நபருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேற்படி பெண் வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லத் திட்டமிட்டிருந்தார் எனவும், அதற்குக் கள்ளத் தொடரைப் பேணிய நபர் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தார் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேற்படி பெண்ணுக்கு அழைப்பை ஏற்படுத்திய சந்தேகநபர் நேற்றுமுன்தினம் பாழடைந்த பங்களாவுக்குள் அவரை அழைத்துள்ளார். அவ்வாறு சென்ற வேளையிலேயே கழுத்தை அறுத்துக் கொலை செய்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
