லொறி – மோட்டார் சைக்கிள் விபத்தில் மனைவி மரணம்; கணவர் படுகாயம் – கினிகத்தேனையில் அதிகாலை துயரம்.

கொழும்பு, மருதானையில் இருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் அதே திசையில் பயணித்த லொறியை முந்திச் செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற மேற்படி பெண்ணின் கணவர் படுகாயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

விபத்தில் உயிரிழந்தவர் கொழும்பு, மருதானையைச் சேர்ந்த 44 வயதுடைய இரண்டு குழந்தைகளின் தாயார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை, மில்லகஹமுல பகுதியில் இன்று அதிகாலை 5:45 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றது.

நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரைப் பார்வையிட இந்தத் தம்பதியினர் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

இதன்போது, கொழும்பில் இருந்து வட்டவளை நோக்கிச் சென்ற லொறியை மோட்டார் சைக்கிள் சாரதி முந்திச் செல்ல முயன்ற போது, லொறியின் இடது பக்கத்தின் நடுப் பகுதியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக் கொண்டது.

இதன்போது, மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் இருந்த பெண் லொறியின் இடது பின்புற சக்கரத்தின் கீழ் வீழ்ந்து நசுங்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மோட்டார் சைக்கிளின் சாரதியின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் என்றும், எனினும் சந்தேகத்தின் பேரில் லொறியின் சாரதி கைது செய்யப்பட்டார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் சட்ட மருத்துவ பரிசோதகரிடம் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் கினிகத்தேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.