வானை பார்த்து ஏங்கும் மனிதர்கள் : சிக்மலிங்கம் றெஜினோல்ட்

சில ஆண்டுகளுக்கு முன்பு, மழையில்லாமல் எங்களுடைய வயலெல்லாம் எரிந்தழிந்தன. பச்சையாக நின்ற பயிரெல்லாம் முதலில் மெல்ல மஞ்சளாக வெளிறத் தொடங்கியது. பிறகு மெல்ல மெல்ல வாடிக் கருகின. இந்தா இண்டைக்கு மழை வரும். நாளைக்கு வரும். அட்டமிக்குப் பெய்யும். பௌர்ணமிக்குக் கொட்டும். கும்பச் சரிவுக்குப் பொழியும். கந்தசஸ்டிக்கு (வானம்) இறங்கும் என்றெல்லாம் ஆயிரம் ஆருடங்கள் சொல்லப்பட்டன. 

சிலர் தங்கள் குல தெய்வங்களுக்குப் பொங்கிலிட்டனர். சிலர் குளிர்த்தி செய்தனர். வயல்களில் இருந்த காவல் தெய்வங்களுக்கு மடை கூட வைக்கப்பட்டது. ஆனால், ஒன்றுக்கும் மழை மசியவேயில்லை.

வானம் இரங்கவுமில்லை. இறங்கவுமில்லை. அந்த வருசம் மழை பொய்த்தது. மழை பொய்த்தால்… விவசாயிகளின் வாழ்க்கையும் பொய்த்துப்போகும் என்பது அழியா விதி. மாடு, கன்று எல்லாம் செத்து மடியும். அல்லது, விலை போகும். பஞ்சம் தலையெடுத்தால் வேறு என்னதான் வழி. கட்டையில் நிற்கும் கால்நடையை விற்க வேணும். அல்லது கழுத்திலிருக்கும் தாலியை அடைவு கடைக்குக் கொடுக்க வேணும்.

அந்த வருசத்தோடுதான் எங்களுக்குக் கஸ்ரமும் வறுமையும் தலையெடுத்தது. வளவில் நின்ற ஆடு, மாடுகளை விற்றே செலவுகளை ஈடுகட்டினார் அப்பா. வருமானம் தரக்கூடிய வளங்களை விற்று விட்டால் பஞ்சம் பிடிக்காமல் என்ன செய்யும்?

 “பயிர் கருகினால் வறுமைதான் முளைக்கும்” என்று அம்மா சொன்னது இப்பொழுதும் நினைவுக்கு வருகிறது. அதுக்குப் பிறகு ஒரு பத்து ஆண்டுகள் அந்த வறுமைச் சூழலிலிருந்து எங்களால் மீள முடியவில்லை. அந்தப் பத்தாண்டுகளும் நாங்கள் பட்ட பாடும், கெட்ட கேடும் சொல்லி மாளாது.

இப்போதும் அப்படியொரு கஸ்ரகாலம் வந்திருக்கிறதோ என்று அச்சமடைய வேண்டியிருக்கு. ஒரு பக்கத்தில் கொரோனாப் பிசாசு. அது வரவர வளர்ந்து, கட்டுப்படுத்தவே முடியாத பெரியதொரு பூதமாக மாறப்போகிறதோ என்று கலக்கத்தை உண்டு பண்ணுது.

மறுபக்கமாக மழையில்லை என்ற ஏக்கம். இன்னும் ஒரு பத்து நாட்களுக்கு மழை இல்லை என்றால் மழையை நம்பிச் செய்கை பண்ணப்பட்ட அத்தனை வயல்களையும் கை விட வேண்டியதுதான். 

கல்லுண்டாய், செம்மணி, மறவன்பிலவு, கெருடாவில், பூநகரி, இயக்கச்சி, மிருசுவில், ஒட்டுவெளி தொடக்கம் முல்லைத்தீவு, மன்னார் என எல்லா இடத்திலும் கடுமையான வரட்சி. குடிக்கும் தண்ணீருக்கே பல இடங்களிலும் பெரிய பிரச்சினை.

இன்றோ, நாளையோ மழை பெய்தால் பாதிக்கு மேலான வயல்கள் திரும்ப விதைக்க வேண்டி வரலாம். ஆனால், அப்படி விதைக்கிறதுக்கு விதை நெல்லுக்குப் பெரிய பிரச்சினை. ஏற்கனவே ஐயாயிரம் வரை போகிறது ஒரு மூடை. இனி அதை விடவும் கூடலாம். அப்படிக் கூடினால், அந்த விலைக்கு நெல்லை வாங்கி, திரும்பவும் உழவு காசைக் கொடுத்து விதைப்பதால் என்ன பயன்?

காணியைச் சும்மா விட முடியாது என்று விதைக்கலாமே தவிர, தொழில், லாபம் என்ற கணக்கில் செய்ய முடியாது. ஆனால், விவசாயிகள் நட்டம் வந்தாலென்ன, லாபம் வந்தாலென்ன ஒரு  காணியை வெறுமே தரிசு பத்த விடமாட்டார்கள். பிறகு அடுத்த போகத்துக்கு புல் எழும்பி, களை பத்தி இரட்டிப்பு வேலையாகி விடும். அதனால் ஊரோடு ஒத்தது என்ற கணக்கில், லாபநட்டத்தைப் பற்றி யோசிக்காமல், செலவழிப்பார்கள். எப்படியும் திரும்ப விதைத்தே தீருவார்கள். இது தனியே விவசாயிகளுக்கு இருக்கிற பொதுக்குணம் என்றில்லை, மீனவர்கள், கள்ளிறக்குவோர் போன்ற இயற்கையை நம்பிய பாரம்பரியத் தொழிலாளர்கள் அத்தனை பேருக்குமுள்ள பொதுப் பிரச்சினை.

மீன் பாடு நல்லாயிருக்கோ இல்லையோ மீனவர்கள் கடலுக்குப் போய்க் கொண்டேயிருப்பார்கள். வலைபடுக்கப்படும்.  தொழிற்பாடு நல்லாயில்லை என்று கையைக் கடித்தாலும் கடனுக்கு எண்ணையை அடித்துக் கொண்டு கடலில் இறங்குவோரே அதிகம். என்ன, கடலம்மா கைவிட மாட்டாள் என்றொரு நம்பிக்கை. இப்படி நம்பிக்கை வைத்துக் காலை இறக்கிக் கையைக் கடித்துக் கொண்டவர்கள் அதிகம். ஆனாலும் அவர்கள் தங்கள் மரபைக் கைவிடுவதில்லை. கடலை விட்டு நீங்குவதுமில்லை. லாபமோ நட்டமோ எல்லாம் அந்தக் கடலன்னை வரம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படித்தான் பனை, தென்னை வளத் தொழிலாளர்களுடைய நிலையும் வாழ்க்கையும். இயலாது என்றாலும் பனையில் ஏறித்தான் ஆக வேணும். பஞ்சி என்று ஒரு நாள் தொழிலைச் செய்யாமல், மரத்தைச் சீவாமல் விட முடியாது. அப்படி விட்டால், பிறகு தொழில் கெட்டுப்பட்டு விடும். அதற்குப் பின் பஞ்சம் அடுப்படியிலேறிப் படுக்கையில் வந்துறங்கும்.

இதையெல்லாம் ஏன் இப்போது சொல்ல வேண்டியிருக்கிறது என்றால், இந்த வருசமும் மழை பொய்த்துக் கொண்டிருக்கிறது. மழை பொய்த்தால் பயிர், கொடி எல்லாமே பொய்த்து விடும். நோய் முற்றிப் பிணி சூழ் வாழ்வே மிஞ்சும். ஏற்கனவே நாடு பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும்போது இயற்கையும் பாதகமாகி நின்றால்….!

அப்படியென்றால் இதற்கு என்ன செய்யலாம்? மழை பொய்த்துப் போனால் நாமென்ன செய்ய முடியும்? என்ற மாதிரியே பலரிடத்திலும் கேள்விகள் எழும்.

இயற்கை பிழைத்துப் பிறழ்வடைந்து போவதற்குப் பெரிய காரணம் மனிதர்களாகிய நாங்களே! PANCHAWARNA SOLAI: மழையும் ..... கண்ணீரும் ..........நம்முடைய சூழலைச் சரியாக வைத்துக் கொள்ளவில்லை என்றால், அந்தச் சூழலே இயற்கையைக் கெடுக்கும். இயற்கை கெடுதியானால் அதன் விளைவு இப்படித்தான் பிழையாகவும் பிறழ்வாகவும் இருக்கும். இதில் முக்கியமானது காடழிப்பு. மரங்களை தொடர்ந்து வெட்டிக் கொண்டேயிருக்கிறோம். பனைகளை, தென்னைகளை வளவுகளில் உள்ள இலுப்பையை, மாவை, புளியை, வேம்பை, நாவலை, பலாவை என்று என்ன  மரம் நின்றாலும் அதையெல்லாம் வெட்டி எடுக்கிறோம். அந்தளவுக்குப் பதிலுக்கு மரங்களை நடுவதுமில்லை. பராமரித்து வளர்ப்பதுமில்லை. அங்கங்கே நடக்கின்ற மர நடுகைகள் எல்லாம் சம்பிரதாயச் சடங்குகளாகவே மாறி விட்டன. பயனுள்ள மரங்களாக வளர்வது மிகக் குறைவு.

ஆனால், முன்னர் அப்படியல்ல. மரங்களை நடுவது நம்முடைய வாழ்க்கை முறையாக இருந்தது. மரங்கள் வருவாய்க்கும் சூழலுக்கும் என்றே வளர்க்கப்பட்டன. நமமுடைய வேலிகள் கூட உயிர் வேலியாகவே, மரங்களாலேயே அமைக்கப்பட்டிருந்தது. இப்பொழுது அத்தனையும் மதில்களாகி விட்டன.

போதாக்குறைக்கு வன்னியிலும் கிழக்கிலும் உள்ள காடுகளையும் அழித்துக் கொண்டிருக்கிறோம். நின்றால் பால். செத்தால் இறைச்சி என்ற கணக்கில்தான் எல்லாம். கிடைப்பதை எல்லாம் எடுப்போம். எடுக்கக் கூடியதையெல்லாம் எடுத்துக்கொள்வோம். நாம் வாழும் வரை நமக்கே எல்லாம் என்ற மாதிரியான ஒரு மன நிலை பலரிடத்திலும் வளர்ந்துள்ளது.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டேயிருக்கிறோம். பொறுப்பானவர்கள் என்றிருப்பவர்கள் இதைக்குறித்து எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. முக்கியமாக அரசியல் தலைமைகள் ஏனோ தானோ என்றே இருக்கின்றன. ஏன் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர்கள் என்று அதிகாரத்தைக் கையிலும் இரண்டு கால்களுக்கிடையிலும் வைத்துக் கொண்டிருப்போர் கூட இதைக் கண்டும் காணாமலே இருக்கின்றனர்.

காடழிப்பு, மணல் அகழ்வு மட்டுமல்ல, குழாய்க்கிணறு என்ற ஆழ்துளைக் கிணறுகள் இப்பொழுது வகை தொகையில்லாமல் கண்டபாட்டுக்கு அடிக்கப்படுகிறது. காணியில் இடம் மிச்சமாகிறது. கிணறை வெட்டிக் கட்டுவதற்குச் செலவாகும் காலத்தை விட விரைவாக குழாய்க்கிணறுகளை அடித்து விடலாம். ஆழத்திற்குக்கொண்டு சென்று குழாய்களை இறுக்குவதால் கோடைகளில் உருவாகும் தண்ணீர்ப்பஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ளலாம் என்று யோசித்துக் கொண்டு பலரும் குழாய்க்கிணறுகளையே அடிக்கிறார்கள். இதைக்குறித்து நீர்த்துறை சார்ந்தோரின் ஆய்வுகள், பரிந்துரைகள், அறிவுறுத்தல்கள் என எதுவுமே கணக்கில் கொள்ளப்படுவதில்லை. இதை ஒரு சரியான முறைப்படுத்தப்பட்ட ஒழுங்கு படுத்தலின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று எந்தத் தலைமையும் யோசிக்கவேயில்லை. இப்படித்தான் அனைத்து விடயங்களிலும் தலைமைத்துவமும் வழிகாட்டலும் இல்லாமலே மக்கள் இன்றுள்ளனர்.

மழை, தண்ணீர்ப்பிரச்சினை, சுற்றுச் சூழல் பாதுகாப்புப் பற்றிக் கதைக்கும்போதெல்லாம் தவிர்க்க முடியாமல் விடுதலைப் புலிகளுடைய நினைவுகளே வருகின்றன. அவர்கள் இதையெல்லாம் எப்படிக் கவனித்தனர். கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்! என்றே யோசிக்கத் தூண்டுகிறது. இதற்குக் காரணம், அவர்கள் இந்த மண்ணை நேசித்தனர். மக்களை நேசித்தனர். மண்ணுக்காகவும் மக்களுக்காகவும் தங்களை அர்ப்பணித்தனர். அதற்காக தம்முயிரையே தியாகம் செய்தனர். செய்யத் துணிந்தனர். இதனால் தாம் நேசித்த மண்ணையும் அதன் வளங்களையும் பேணிப் பாதுகாத்தனர். அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அப்படித்தான் தங்களுடைய மக்கள் சிறப்பாக, நல்ல பண்பாட்டுடன், நல்ல சூழலில் வாழ வேண்டும் என்று விரும்பினார். அந்தக் கனவைச் சாத்தியப்படுத்துவதற்காக அவர்கள் பாடு பட்டனர்.

இன்றுள்ள தலைமைகளோ மக்களையும் மண்ணையும் சூழலையும் வைத்துத் தம்மை வளப்படுத்திக் கொள்கின்றன. இவையெல்லாம் தமது நலனுக்கானவையே என்றே எண்ணுகின்றன. இப்படிச் சிந்தித்தால் எப்படி விடிவும் விடுதலையும் சாத்தியாகும்?

“நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைக்கையில்” என்ற பாரதியும் “நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான் இன்று அமையாது ஒழுக்கு – (குறள் 20) என்ற வள்ளுவரும் இப்போதிருந்தால் என்ன சொல்வார்கள்?

  • சிக்மலிங்கம் றெஜினோல்ட்

Leave A Reply

Your email address will not be published.