முத்துஐயன்கட்டுக் கொலை: சுமந்திரன் கடும் கண்டனம்! – நீதியான விசாரணைக்கு பொலிஸிடம் வலியுறுத்து.

“முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுப் பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். இது தொடர்பில் பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.”

இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் ஊடக சந்திப்பொன்றை நடத்தி மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“முல்லைத்தீவு, முத்துஐயன்கட்டுக் குளத்தில் கடந்த சனிக்கிழமை காலை தமிழ் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை ஐந்து பேர் முத்துஐயன்கட்டு இராணுவ முகாமுக்கு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நால்வர் முகாமில் இருந்து தப்பித்துச் சென்றுள்ளார்கள். ஒருவர் காணாமல்போயிருந்தார். அவரின் சடலம்தான் முத்துஐயன்கட்டுக் குளத்தில் இருந்து பின்னர் மீட்கப்பட்டுள்ளது.

முகாமுக்குள் வைத்து இராணுவத்தினர் தம்மை மிக மோசமாகத் தாக்கினார்கள் என்று தப்பித்து வந்தவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இராணுவத்தினரால் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட இளைஞரின் சடலம் குளத்தில் வீசப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் உடன் விசாரணை செய்யப்பட வேண்டும் எனவும், பொறுப்பானவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தோம்.

இவ்வாறான நிலையில் சனிக்கிழமை மாலை ஒட்டுசுட்டான் பொலிஸாரினால் ஒருசில இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். அதில் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் எவ்வித தலையீடுகளுமின்றி முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். பிரதான விடயம் யாதெனில் ஒரு சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் அது தொடர்பில் விசாரிக்கப்பட வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று சொல்லுவது பிரயோசனமற்றது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் அந்தப் பிரதேச மக்களுக்கு எதிராகச் செயற்படுகின்றார்கள். மக்கள் மீது வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றார்கள். இதற்குச் செம்மணி ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

செம்மணி – சித்துப்பாத்திப் பகுதியில் குறுகிய காலத்துக்குள் 147 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. பல வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களே எலும்புக்கூடுகளாக மீட்கப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரியவருகின்றது.

இவ்வாறான பின்னணியில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவத்தினர் தொடர்ச்சியாக நிலைகொண்டுள்ளதையும், அதனால் ஏற்படும் பாதிப்பையையும் மிக வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அதேவேளை, இராணுவப் பிரசன்னத்துக்குப் பாரிய எதிர்ப்புத் தெரிவித்து எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முழுமையான ஹர்த்தாலில் ஈடுபடுமாறு சகல தரப்பினரிடமும் கோருகின்றோம். எமது மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள் மற்றும் அநீதிகளைக் கருத்தில்கொண்டு வர்த்தகர்கள் அன்றைய தினம் கடையடைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

சகல நடவடிக்கைகளையும் கைவிட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் முழுமையாக முடங்க வேண்டும். இதற்கு அனைவரது ஒத்துழைப்பையும் கோருகின்றோம்.

அரசியல் கட்சிகள், சிவில் சமூக அமைப்புக்கள், பொது அமைப்புக்கள், வர்த்தகர்கள் அனைவரும் இந்தக் ஹர்த்தால் போரட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கின்றேன்.” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.