பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆளுங்கட்சி ஆதரவளிக்க வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்து.
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரியைக் கண்டறியும் நோக்கம் அரசுக்கு இருக்குமானால் பாதுகாப்பு பிரதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஏற்க வேண்டும்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்,
“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவரும் பகிரங்கப்படுத்தப்படுவார்கள் எனத் தேசிய மக்கள் சக்தி உறுதியளித்திருந்தது. எனினும், அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றபோது கிழக்கு மாகாணக் கட்டளைத் தளபதியாக இருந்துள்ளார். சாரா என்பவரும் அந்தப் பகுதியில் இருந்தே மாயமாகியுள்ளார்.
எனவே, முறையான விசாரணை இடம்பெற வேண்டுமானால் பாதுகாப்பு பிரதி அமைச்சர் பதவி விலக வேண்டும். அப்போதுதான் அவருக்குக் கீழ் இருந்தவர்கள் பற்றியும் விசாரணை நடத்த முடியும்.
நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்படுமா என்பது முக்கியம் அல்ல. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம்.
பிரதான சூத்திரதாரியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உண்மையான நோக்கம் அரசுக்கு இருந்தால், பிரேரணையை ஏற்க வேண்டும்.” – என்றார்.
