காத்தான்குடியில் பலசரக்கு வர்த்தக நிலையமொன்றில் பாரிய தீ

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி பிரதான வீதியில் பலசரக்கு வர்த்தக நிலையமொன்றில் செவ்வாய்கிழமை (03) காலை ஏற்பட்ட பாரிய தீவிபத்தினால் பல கோடி பெறுமதியான பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

செவ்வாய்கிழமை காலை 10.00 மணியளவில் குறித்த வர்த்தக நிலையத்தினுள் ஏற்பட்ட பாரிய தீயினைக் கட்டுப் படுத்த பொலிசாரும் மட்டக்களப்பு மாநகர சபை தீயணைக்கும் படையினரும் பாரிய முயற்சியினை மேற்கொண்ட போதிலும் சுமார் இரு மணி நேரத்திற்கும் அதிகமாக தீயைக் கட்டுப்பாட்டினுள் கெண்டுவர முடியாது பெரும் சிரமங்களை எதிர் கொண்டனர் இருப்பினும் கடின முயற்சியின் பின் தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையமான குறித்த வர்த்தக நிலையம் எரிவாயு முகவர் நிலையமுமாகும். இதனால் அயல்வாசிகள் தமது வீடுகளை விட்டு சில மணிநேரம் வெளியேறியதையும் அவதானிக்க முடிந்தது. இதேவேளை இத்தீபரவலினால் ஒருவர் காயமடைந்து ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான பாதையை மூடிய பொலிசார் போக்குவரத்திற்கு மாற்றுவழிகளைப் பயன்படுத்தினர். இதேவேளை மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sathasivam Nirojan

Leave A Reply

Your email address will not be published.