அவுஸ்திரேலிய கணனிக் கட்டமைப்பு மீது சைபர் தாக்குதல்

அவுஸ்திரேலியாவின் தேசிய கணினிக் கட்டமைப்பில் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரச நிறுவனங்கள் உட்பட பல்வேறு துறைகளின் கணினிக் கட்டமைப்பு இதனால் செயலிழந்தது.

இவ்வாறான செயற்பாடுகள் அவுஸ்திரேலியாவின் கல்வி, சுகாதாரம், அரசியல் போன்ற துறைகளில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மிகவும் சூட்சுமமான முறையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் அரசாங்கமொன்றின் ஒத்துழைப்பு இருப்பதாகவும் அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

நவீன உலகில் இவ்வாறான அச்சுறுத்தல்கள் மற்றும் இடையூறுகளுக்கு மத்தியில் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த சைபர் தாக்குதல், சீனாவின் முன்னணி புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட செயற்படாக இருக்கலாம் என சந்தேகிப்பதாக நிபுணர்களை மேற்கோள் காட்டி அவுஸ்திரேலியாவின் அரச ஔிபரப்புச் சேவையான ABC நிறுவனம் தெரிவித்துள்ளது.

சீனாவின் முன்னணி தொடர்பாடல் விநியோகஸ்தர் ஒருவரின் 5G தொழில்நுட்பத்தை தடை செய்வதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கான பதிலாக இது அமையலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், சீன அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளது.

அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து நிதியைப்பெறும் அவுஸ்திரேலியாவின் நிறுவனமொன்று இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளதாக சீன வௌிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

Comments are closed.