இனி யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்!

No Fees for Person-to-Person Transactions – தனி நபர்களுக்கு இடையேயான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பயனர்கள் எந்தக் கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசு மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

மத்திய அரசு விளக்கம்
யுபிஐ உள்ளிட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.

இதற்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் எதிர்ப்பு தெரிவித்து, யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு இதுவரை இருந்த கட்டணமில்லா நடைமுறை மாற்றப்படுவதாகவும், இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எம்.டி.ஆர். எனப்படும் வர்த்தக தள்ளுபடி கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பொதுமக்களுக்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.

தனி நபர்களுக்கு இடையேயான யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு பயனர்கள் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை என்றும் மத்திய அரசு மீண்டும் விளக்கம் அளித்துள்ளது.

எதிர்காலத்தில் குறிப்பிட்ட சில வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு மட்டும் குறைந்த அளவில் கட்டணம் விதிக்கப்படலாம் என்றும், இந்தக் கட்டணம் ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களை விடக் குறைவாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விசா, மாஸ்டர்கார்டு போன்ற அமெரிக்க கட்டணச் சேவை நிறுவனங்களுக்கு சாதகமாக யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டையும் மத்திய அரசு மறுத்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.