ட்ரம்பின் விசேட பிரதிநிதிக்கும் அநுரவுக்கும் இடையில் சந்திப்பு.

ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்காவுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான விசேட பிரதிநிதி, இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதுவராக பெயரிடப்பட்டுள்ள பிரதிநிதி மற்றும் வெள்ளை மாளிகை ஜனாதிபதி பணிக்குழாம் பணிப்பாளர் செர்ஜியோ கோருக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்க நேரப்படி நேற்று பிற்பகல் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில் வர்த்தக, வாணிப, சுற்றுலா மற்றும் முதலீடு உள்ளிட்ட இரு நாடுகளுக்கும் முக்கியமான துறைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதோடு அந்தத் துறைகளை மேலும் முன்னேற்றுவது குறித்தும் ஆராயப்பட்டது.

முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு பலமான மக்கள் ஆணையுடனான புதிய அரசு என்ற வகையில், பொருளாதார வளர்ச்சியை மையமாகக் கொண்ட ஒரு வளமான பொருளாதார முன்னுரிமை அடிப்படையில் அமெரிக்காவுடன் ஒரு செயற்பாட்டுடனான மற்றும் மிக நெருக்கமான உறவைப் பேண எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

வெளிப்படைத் தன்மையை உறுதி செய்தல் உட்பட மக்களின் எதிர்காலத்துக்காக பொருளாதாரத்தின் நீண்ட கால ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்குத் தேவையான மறுசீரமைப்பு உள்ளிட்ட அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளையும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக சமமின்மையை நிவர்த்தி செய்தல், இரு தரப்பு வர்த்தகத்துக்கான தடைகளைக் குறைத்தல், நியாயமான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக உறவுகளை உறுதி செய்வதற்காக ஒரு உடன்பாட்டை எட்டுதல் மற்றும் இலங்கைப் பிரதிநிதிகளுக்கும் அமெரிக்க அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுகளின் முன்னேற்றம் தொடர்பில் இதன்போது இரு தரப்பினரும் மீளாய்வு செய்தனர்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜயசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.